பேஸ்புக் நிறுவனத்தின் இந்திய தலைவராக விளங்கும் அஜித் மோகன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றைய நவீன உலகில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. ட்விட்டர், பேஸ்புக், வாட்ஸ்அப், டெலகிராம் உள்ளிட்ட பல சமூக வலைதளங்கள் உள்ளன. இதில் பேஸ்புக் 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பேஸ்புக் தான் முதல் சமூக வலைதளமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.
கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற பேஸ்புக் நிறுவனத்தின் ஆண்டு விழா கூட்டத்தின் போது, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜக்கர்பெர்க் , பேஸ்புக் நிறுவனத்தின் பெயரை ‘மெட்டா’ என மாற்றி உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவராக விளங்குபவர் அஜித் மோகன். இவர் கடந்த 2019ம் ஆண்டு முதல் மெட்டா நிறுவனத்தின் இந்திய தலைவராக விளங்கி வருகிறார். இந்நிலையில் அவர் தனது பொறுப்பிலிருந்து விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் ராஜினாமாவிற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.







