ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா 849- ஆம் ஆண்டு சந்தனக்கூடு திருவிழாவில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது
இபுராகிம் ஷகீது ஒலியுல்லாஹ் பாதுஷா நாயகம் சந்தனக்கூடு சமூக நல்லிணக்க
திருவிழா மவ்லீது ஷரீப் உடன் மே 21ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய
நிகழ்வான சந்தனக்கூடு திருவிழா நேற்று (ஜூன் 12)மாலை 4:30 மணிக்கு யானை, குதிரைகள் நடனமாட, தாரை தப்பட்டை ஒலிக்க, வானில் வாண வேடிக்கை வர்ண ஜாலம் காட்ட ஊர்வலமாக தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும்
நிகழ்வு நடந்தது.
இன்று (ஜூன் 13) அதிகாலை ஏர்வாடி முஜாவீர் நல்ல இபுராஹீம் தர்ஹாவில் இருந்து சந்தனக்கூடு எடுத்து, அலங்கார ரதத்துடன் ஊர்வலம் புறப்பட்டு, அதிகாலை 5:30 மணியளவில் தர்ஹா வந்தடைந்தது. தர்ஹாவை 3 முறை சந்தனக்கூடு வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது மக்பராவில் பச்சை மற்றும் பல வண்ண வண்ண போர்வைகளால் போற்றப்பட்டு மல்லிகை பூ உசரங்களால் அலங்கரிக்கப்பட்டு சந்தனம் பூசப்பட்டது.
திருவிழாவை காண தென்னிந்தியா, தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பக்தர்கள்
குவிந்தனர். வண்ண, வண்ண மின் விளக்கொளி அலங்காரத்தில் தர்ஹா ஜொலித்தது.
மதுரை, கோவை, திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய நகரங்களில் இருந்து
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துள் ஏர்வாடிக்கு இயக்கப்பட்டன.
தர்ஹா வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன. தர்ஹா வளாகத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்தனர்.
எஸ்.பி., தங்கதுரை தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிறுபான்மை
மற்றும் வெளிநாடு வாழ் மக்கள் நல அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டார்.
சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு இன்று ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார். தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த பொதுமக்களும் மலேசியா சிங்கப்பூர் துபாய், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சார்ந்த பொதுமக்களும்
கலந்து கொண்டனர்







