தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் நிரூபிக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஈரோடு இடைத்தேர்தல் முடிவு இருக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் மற்றும்…

தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஈரோடு இடைத்தேர்தல் முடிவு இருக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் மற்றும் தேமுதிக தேர்தல் பணிக்குழு செயலாளர் கொ.தங்கமணி இல்ல திருமண விழா இன்று திருச்சியில் நடைபெற்றது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள கலையரங்கம் வளாகத்தில் நடைபெற்ற திருமண விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற தேர்தலில் முதன் முறையாக தேமுதிக வேட்பாளரை களம் இறக்கியுள்ளது. அவர் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் கண்டிப்பாக வெற்றி பெறுவார்.

அவரை பார்க்கும் போது விஜயகாந்தை பார்ப்பது போல் மக்கள் எண்ணுகிறார்கள். அதனால் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நிச்சயம் அவர் வெற்றி பெறுவார். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். அது போலவே தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை இந்த ஈரோடு இடைத்தேர்தல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ளலாம் என்று தன் கட்சியின் நிலை குறித்து பெருமிதமாக கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரேமலதா, இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா அல்லது பணநாயகமா .. அது எப்படி நடக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். எங்களது கட்சியை யாரும் பின் நின்று இயக்கவில்லை. தேமுதிக தலைவர் விஜயகாந்த் மட்டுமே இயக்குகின்றார் என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்: திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டன: காட்டமாக விமர்சித்த இபிஎஸ்

மேலும் தேமுதிகவின் பொது செயலாளராக உங்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு ? பதிலளித்து பேசிய அவர், பொதுக்குழுவை கூடி அதற்கான அறிவிப்பை விரைவில் விஜயகாந்த் அறிவிப்பார்.

தேமுதிகவின் கொள்கைகளுக்கு ஒத்து போகும் வகையில் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள். கடந்த காலத்தில் அதிமுகவுடன் நாங்கள் கூட்டணி வைத்தோம். ஆனால் சில கருத்து வேறுபாடுகள் காரணமாக தற்போது அவர்களுக்கு ஆதரவு அளிக்கவில்லை. எனவே எங்களது நிலைப்பாடு என்ன என்பதை எப்போதும் விஜயகாந்த் தான் முடிவு செய்வார் என்று கூறினார்.

இதனையடுத்து திமுக ஆட்சி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய பிரேமலதா விஜயகாந்த் , திமுக பொறுப்பேற்றதில் இருந்து தற்போது மக்கள் மத்தியில் அவர்களுக்கு பெரிய அளவில் ஆதரவு இருப்பதாக தெரியவில்லை. அமைச்சர்கள் பலர் நிறைய பணத்தை செலவு செய்வது போல் தெரிகிறது. மக்கள் பிரச்னை இங்கு ஏராளம் உள்ள நிலையில் வீணாக பணத்தை கொடுத்து செலவு செய்ய வேண்டாம்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி இந்த ஆட்சி நல்லாட்சி என்று நிரூபிக்க கூடிய கட்டாயத்தில் திமுக உள்ளது. அதற்கான முயற்சிகளில் இறங்காமல் , எழுதாத பேனாவுக்கு நினைவு சின்னம் அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பேனாவுக்கு நினைவு சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது. அதுவும் கடலில் வைப்பது என்பது தேவையில்லாத ஒன்று என்றும் விமர்சனம் செய்தார்.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.