எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியை நான் எதுவும் தரம் குறைவாக பேசவில்லை. ஒருவேளை நான் சனாதனம் குறித்து பேசியதால் அவரது மனம் கஷ்டப்பட்டிருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உலகக் கோப்பை செஸ் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பிரக்ஞானந்தா, இந்தியாவின் முதல் நிலை செஸ் வீரர் குகேஷ் ஆகியோருக்கு, அவர்கள் பயின்ற வேலம்மாள் நெக்சஸ் பள்ளி நிறுவனம் சார்பில் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் 5 முறை உலக சாம்பியன் மற்றும் உலக சதுரங்க கூட்டமைப்பின் துணை தலைவர் விஸ்வநாதன் ஆனந்த, தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு, விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அதுல்யா மிஸ்ரா மற்றும் சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.
அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, 37 வருடங்களாக இந்திய செஸ் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருந்த 5 முறை உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்கு தள்ளி, இந்தியாவின் முதல் நிலை வீரராக முன்னேறியுள்ள குகேஷ் மற்றும் வேலம்மாள் பள்ளியில் பயின்று உலக சதுரங்கத்தில் சிறப்பாக விளையாடி வரும் செஸ் வீரர்கள் என அனைவருக்கும் ரூபாய் 60 லட்சம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக, அவர் மீது எடப்பாடி பழனிச்சாமி வழக்கு தொடர்ந்துள்ளது குறித்து, கேட்கப்பட்ட கேள்விக்கு, என் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வழக்கு போட்டு இருப்பது குறித்து நான் இன்னும் அறியவில்லை.
எனக்கு 10 கோடி, 10 லட்சம் விதித்தது போக இப்போ ஒன்னரை கோடி கேட்கிறார்கள். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியை நான் எதுவும் தரம் குறைவாக பேசவில்லை. ஒருவேளை நான் சனாதனம் குறித்து பேசியதால் அவரது மனம் கஷ்டப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் என அவர் பேசினார். மேலும் கொசுவர்த்தி சுருள் பதிவு தொடர்பாக பார்ப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என அவர் பேசினார்.







