நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு வழக்கில் இறைவனே நினைத்தாலும் எடப்பாடி பழனிசாமி தண்டனை பெறுவதில் இருந்து தப்ப முடியாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், சசிகலா, டி.டி.வி. தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொன்ன கருத்து வரவேற்கதக்கது என்றார். ஆனால் சில மேதாவிகள் சுவாசமே துரோகமாக கொண்டவர்கள் நல்ல விஷயத்திற்கு ஒத்துவர மாட்டார்கள் என்று சாடினார்.
நாடாளுமன்ற தேர்தலில் பிரதமரை தேர்வு செய்வதில் அணிலை போல் செயல்படுவோம் என்றவர், 2023 கடைசியில் கூட்டணி காங்கிஸ் உடனா அல்லது பா.ஜ.க வோடு கூட்டணியா
என்பதை தெரிவிப்பேன் எனகூறுவதாக விமர்சனம் செய்தார்.

அ.தி.மு.க பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய டிடிவி தினகரன், நீதியரசர் ஜெயச்சந்திரனின் தீர்ப்பு சட்டதிட்ட விதி அடிப்படையில்
தீர்ப்பளித்துள்ளார். சரியான தீர்ப்பு அது தான். உச்சநீதிமன்றத்திலும் தொடரும் என்றும் தனக்கு தெரிந்த சட்ட அனுபவப்படி சொல்வதாக கூறினார்.
நெடுஞ்சாலை டெண்டர் வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி தண்டனை பெறுவதில் இருந்து இறைவனே நினைத்தாலும் தப்ப முடியாது என்ற அவர், எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகியாக மாறிவிட்டதாகவும், மக்கள் தீர்ப்பளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்







