தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தல் உள்ளிட்டவைகளுக்கான சிறப்பு முகாமல் 2 நாட்களாக நடந்து வருகிறது.
தமிழகத்தில் உள்ள வாக்காளர்களின் மொத்த விவரம் குறித்த பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பு மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார். அதன்படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியுள்ளது. வரும் டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் வரை இப்பணி நடைபெறுகிறது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நேற்று முதல் வாக்காளர் பெயர் சேர்த்தல் மற்றும் திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் தொடங்கியது. இது 2-வது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) வாக்காளர் பட்டியல் திருத்தம் மற்றும் பெயர்களை புதிதாக சேர்க்கும் முகாம் நடக்கிறது. இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.
தமிழகத்தில் உள்ள 69 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.







