கர்நாடக முதலமைச்சர் தேர்வு குறித்து எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில் காங்கிரஸ் மேலிடத்திற்கு அதிகாரம் வழங்கி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்தது. இதில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, இந்த தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த 13 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர்.
முதலமைச்சரை தேர்வு செய்வது குறித்து வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைமையிலான கூட்டம் மாலை தொடங்குவதாகவும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முதலமைச்சரை தேர்வு செய்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூட்டத்திற்கு தாமதமாக வந்த நிலையில் கூட்டம் தொடங்கியது.
தனியார் ஹோட்டலில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கும் நுழைவாயில் முன்பு முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவர் முதலமைச்சர் வேட்பாளராக ஆக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக முதல்வர் தேர்வு குறித்த இறுதி முடிவை கட்சி மேலிடம் முடிவு செய்யும் சட்டமன்ற உறுப்பினர் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.







