”தமிழ்நாட்டின் முதலமைச்சராக தாம் வருவோம் என்று கனவிலும் எடப்பாடி பழனிசாமி நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். அதிசயம் அற்புதம் நிகழ்ந்தது, முதலமைச்சர் ஆனார்.” திரைத்துறையில் கமல்ஹாசனின் 60 ஆண்டுகள் பயணத்தை கொண்டாடும் விழாவில் ரஜினிகாந்த் பேசிய வார்த்தைகள் இவை. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனது வேண்டும் என்றால் ஒரு அதிசயமாக தெரியலாம். ஆனால் அதற்கு பிந்தைய அரசியல் பயணத்தில் அவர் அடைந்த வெற்றிகள் ஆளுமையாலும், அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பாலும் இயல்பாக கிடைக்கப்பெற்றவை.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்த அரசு 20 நாட்கள் தாங்குமா, ஒரு மாசம் தாங்குமா என பலர் ஏளனம் பேசினர். ஆனால் அந்த ஆட்சியை நான்கரை ஆண்டுகள் நீடிக்கச் செய்ததில் தொடங்கி, அதிமுகவின் ஒற்றை தலைமையாக, இடைக்காலப் பொதுச் செயலாளராக எம்.ஜி.ஆர். மாளிகைக்குள் கம்பீரமாக நுழைந்தது வரை தன்னை தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக நிலைநாட்டியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிந்தைய அதிமுகவின் புதிய சகாப்தத்தில் இரட்டை தலைமை, கூட்டுத்தலைமை அழைப்புகளையெல்லாம் நிராகரித்துவிட்டு அக்கட்சியின் தனித் தலைமையாக கெத்து காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. 1974ம் ஆண்டு அதிமுகவில் சேர்ந்த இபிஎஸ் சுமார் 50 ஆண்டுகாலம் அக்கட்சியில் பயணித்துவருகிறார். இதில் கடந்த ஐந்தரை ஆண்டுகள் அவரது அரசியல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான தருணம். எடப்பாடி பழனிசாமியாக அறிப்பட்டவர் இபிஎஸ் ஆக அழைக்கப்பட்ட இந்த காலக்கட்டத்தில்தான் தனக்கென தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்துள்ளார். ஜெயலலிதா, கருணாநிதி, மறைவுக்கு பின்னர் தமிழ்நாடு அரசியலில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பும் தலைவர்களில் ஒருவராக உயர்ந்த இபிஎஸ், கடந்த ஐந்தரை ஆண்டுகளில் தமது அரசியல் வாழ்க்கையில் ஏழு முக்கிய எழுச்சிகளை அடைந்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலாவை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்குவதற்கு அதிமுகவில் ஏற்பாடுகள் எல்லாம் நிறைவு செய்யப்பட்டிருந்தன. ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் அவர் சிறைசெல்ல நேர்ந்தது. அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகும் வாய்ப்பு அதிமுகவில் யாருக்கு கிடைக்கப்போகிறது என்கிற பரபரப்பு எழுந்தது. கட்சியில் தம்பித்துரை செங்கோட்டையன், பொன்னையன் உள்ளிட்ட சீனியர்கள் பலர் இருந்தும், தனது நம்பிக்கைக்குரியவராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்து அவர் தமிழ்நாட்டின் 7வது முதலமைச்சராகும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார் சசிகலா. அதுவரை இரண்டாம் கட்ட தலைவராக அறியப்பட்டவருக்கு முதல்கட்ட தலைவர் என்கிற அந்தஸ்தை கொடுத்தது முதலமைச்சர் பதவி
இரட்டை இலை மீட்டெடுப்பு
அதிமுகவை 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் அமரவைத்த இரட்டை இலை, தனது 48 ஆண்டுகால வரலாற்றில் இரண்டு முறை முடங்கியிருக்கிறது. கடந்த 1987ம் ஆண்டு எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின்னர் அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என பிரிந்திருந்தபோது இரட்டை இலை முதல் முறையாக முடங்கியது. அப்போது அதனை எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள் ஒத்துழைப்புடன் மீட்டெடுத்தார் ஜெயலலிதா. அவர் கடந்த 2016ம் ஆண்டு மறைந்த பின்னர் அதிமுக மீண்டும் பிளவுபட்டது. ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி என கட்சி பிரிந்ததால் இரட்டை இலை சின்னம் முடங்கியபோது, ஓ.பன்னீர் செல்வம் ஒத்துழைப்புடன் இரட்டை இலையை மீட்டெடுத்தார் எடப்பாடி பழனிசாமி. தமக்கு 120க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்த போதிலும், 11 எம்.எல்.ஏக்கள் ஆதரவையே வைத்திருந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு கட்சியின் ஒற்றுமை கருதி ஒருங்கிணைப்பாளர் பதவியை விட்டுக்கொடுத்தவர் இபிஎஸ் என தற்போதும் அவரது ஆதரவாளர்கள் கூறுவதுண்டு.
முதலமைச்சர் வேட்பாளர்
நாள் கணக்கில், வாரக்கணக்கில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியின் ஆயுளை எண்ணிக்கொண்டிருந்தவர்கள் வாயடைத்துப்போகும் அளவிற்கு, ஜெயலலிதா ஏற்படுத்திக்கொடுத்த ஆட்சியை முழுமையான பதவி காலத்திற்கு கொண்டு சென்றார் இபிஎஸ். 2016ம் ஆண்டு தேர்தல் முடிந்து சுமார் 6 மாதங்களில் முதலமைச்சராக பதவியேற்றவர் அடுத்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை அந்த பதவியில் தொடர்ந்தார். 2017ம் ஆண்டு இபிஎஸ் முதலமைச்சரானது தற்செயலானதாக இருந்திருக்கலாம். ஆனால் 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஒருவேளை அதிமுக வென்று எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆகியிருந்தால் அதை தற்செயலானதாக விமர்சிக்க முடியாது. அதிமுகவிலும், பொதுமக்கள் மத்தியிலும் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்க நிறையே உழைப்பை சிந்தியிருக்கிறார் இபிஎஸ். 2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிய அந்த சமயத்தில் அதிமுக இரட்டை தலைமையாக பயணித்துக்கொண்டிருந்தால் முதலமைச்சர் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வமா, எடப்பாடி பழனிசாமியா என்கிற பரபரப்பு நிலவியது. பல்வேறு திருப்பங்களுக்கு பின்னர் அந்த பலப்பரிட்சையில் வென்றார் இபிஎஸ். அவர்தான் முதலமைச்சர் வேட்பாளர் என தமது வாயாலேயே அறிவித்தார் ஓ.பன்னீர் செல்வம்.
எதிர்க்கட்சித் தலைவர்
2021ம் சட்டப்பேரவை தேர்லில் அதிமுக தோல்வி அடைந்தது அக்கட்சிக்கும் இபிஎஸ்க்கும் ஒரு சறுக்கலாக அமைந்தது. எனினும் கட்சியில் தனது பிடியை தளரவிடவில்லை எடப்பாடி பழனிசாமி. அதற்கு அடையாளமாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு ஓபிஎஸ் தரப்பிலிருந்து கடும் போட்டியிருந்தாக கூறப்பட்டது. எனினும் இந்த பலப்பரிட்சையிலும் வென்று தேர்தல் தோல்விக்கு பின்னரும் கட்சியில் தனது செல்வாக்கு தக்கவைக்கப்பட்டிருப்பதை உணர்த்தினார் எடப்பாடி பழனிசாமி.
எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் ஆதரவு
2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பின்னர் அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பினரிடையே மனக்கசப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்கிற சர்ச்சையும் வலுத்தது. தலைமை விவகாரத்தில் கட்சி ஒரு முடிவை நோக்கி சென்று கொண்டிருந்த அந்த நேரத்தில், அதிமுக எம்.எல்.ஏக்கள் 66 பேரில் 62 எம்.எல்.ஏக்களின் ஆதரவை தக்க வைத்துக்கொண்டார் இபிஎஸ். மேலும் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவையும் அவர் பெற்றார். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்தனர்.
இடைக்காலப் பொதுச் செயலாளர்
கடந்த ஜூன் 23ந்தேதி பொதுக்குழுவில் தனது பலம் என்ன என்பதை நிரூபித்த எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் உடன் இணைந்து இனி தாம் அரசியல் பயணத்தை தொடர வாய்ப்பு இல்லை என்றும் சுட்டிக்காட்டினார். அதிமுகவில் இரட்டை தலைமை என்கிற அத்யாயம் முடிவுக்கு வந்து, மீண்டும் ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த அன்றே நாள் குறிக்கப்பட்டது. ஜூலை11ந்தேதி பல்வேறு திருப்பங்களுக்கு பின் சென்னை வானகரத்தில் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூடியது. காலை 9.15மணிக்கு பொதுக்குழு கூடிய நிலையில் 9 மணிவரை பொதுக்குழு நடைபெறுமா, நடைபெறாதா என்கிற பரபரப்பு நிலவியது. ஜூலை 11ந்தேதி பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் காலை 9 மணிக்கு தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு அனுமதி கொடுத்தார். இதையடுத்து அந்த பொதுக்குழுவில் இடைக்காலப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு அதிமுகவின் ஒற்றை தலைமையாக உருவெடுத்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக அலுவலகத்தில் அரியணை ஏறினார்
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகை செல்வது ஒன்றும் எடப்பாடி பழனிசாமிக்கு புதிதல்ல. மாவட்டச் செயலாளராக, எம்.எல்.ஏவாக, அமைச்சராக பல்வேறு விதமான பொறுப்புக்களோடு அந்த அலுவலகத்திற்கு சென்றுள்ளார் இபிஎஸ். ஆனால், கடந்த 8ந்தேதி எம்.ஜி.ஆர் மாளிகையில் இபிஎஸ் காலடி எடுத்து வைத்து அவரது அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் நிகழ்வு. ஜூலை11ந்தேதி அதிமுகவின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கால் அந்த பதவிக்கு சட்டச் சிக்கல் ஏற்பட்டது. அதிமுகவில் ஜூன் 23ந்தேதிக்கு முந்தைய நிலையே தொடரும் என கடந்த ஆகஸ்ட் 17ந்தேதி தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தபோது எடப்பாடி பழனிசாமியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவியே கேள்விக்குறியானது. இதையடுத்து இந்த வழக்கில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்து சட்டப்போராட்டம் நடத்தினார் இபிஎஸ். இந்நிலையில் ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்கிற உத்தரவை வழங்கியது நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அடங்கிய அமர்வு. இதன் மூலம் அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டதும், அந்த அதிகாரத்தை வைத்து அவர் கட்சியில் மேற்கொண்ட நியமனங்கள் மற்றும் நீக்கங்கள் உள்ளிட்ட நடவடிக்கைகளும் செல்லுபடியாகும் என்பதும் உறுதியானது. அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிமைகோரி ஏற்கனவே ஓபிஎஸ், இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் அந்த அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமி வசம் ஒப்படைக்கவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து எம்.ஜி.ஆர் மாளிகையின் சாவி தனது கைக்கு கிடைத்த பின்னரும் அங்கு செல்லாமல் இருந்து வந்த எடப்பாடி பழனிசாமி, அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளர் தாம் என்பதை சட்டரீதியாகவும் நிலைநாட்டிவிட்டு அந்த பெருமிதத்தோடு கடந்த 8ந்தேதி அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் காலடி எடுத்து வைத்துள்ளார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிந்தைய அதிமுகவின் அத்யாயத்தில் எடப்பாடி பழனிசாமி அடைந்த ஏழாவது எழுச்சி இது என அவரது ஆதரவாளர்கள் வர்ணிக்கின்றனர்.
அரசியல் ரீதியிலான நெருக்கடிகளையும், சட்டப்போராட்டங்களையும் ஓபிஎஸ் தரப்பிடமிருந்து இபிஎஸ் தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால் தற்போதைய நிலைப்படி அதிமுக என்கிற பந்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த வெற்றி வீரனாக எடப்பாடி பழனிசா










