உயர்நீதிமன்ற தீர்ப்பு எதிரொலி – சின்ன உடைப்பு கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் வீடுகளை அகற்ற அரசு அதிகாரிகள் முயன்றனர். ஆனால்…

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் தீர்ப்பை வரவேற்கும் விதமாக, சின்ன உடைப்பு கிராம மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் வீடுகளை அகற்ற அரசு அதிகாரிகள் முயன்றனர். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் கடந்த ஒருவார காலமாக போராட்டம் நடத்தினர். அப்பகுதியிலேயே மாற்று இடம், வீடு கட்டிதர வேண்டும், தற்போதைய சந்தை மதிப்புக்கு ஏற்றவாறு நிலத்திற்கு இழப்பீடு தரவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தினர்.

மேலும் போராட்டத்தின் போது மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிமீது ஏறி இளைஞர்கள் தீக்குளிக்க முயற்சித்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பிரதான சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வு வசதிகளை முறையாக செய்து தரும் வரை சின்ன உடைப்பு கிராம மக்களை அங்கிருந்து வெளியேற்ற தடை விதித்து உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அமர்வில் 200க்கும் மேற்பட்டோர் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி மாலா முன் இன்று விசாரணைக்கு வந்தநிலையில், மதுரை சின்ன உடைப்பு கிராம மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.  நீதிமன்ற உத்தரவையடுத்து போராட்டத்தை கிராம மக்கள் வாபஸ் பெற்றனர். மேலும் இந்த தீர்ப்பை வரவேற்கும் விதமாக தங்களது கிராம மக்களை ஒருவருக்கொருவர் கட்டி அணைத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தீர்ப்பை பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.