சிரியாவில் நிலநடுக்கம் – பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

சிரியாவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிரியா நாட்டின் ஹமா நகரத்தில்  இருந்து கிழக்கே 28 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5…

சிரியாவில் நிலநடுக்கம்  ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிரியா நாட்டின் ஹமா நகரத்தில்  இருந்து கிழக்கே 28 கி.மீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகவும், 3.9 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டதாக சிரிய தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது உள்ளூர் நேரப்படி இரவு 11:56 மணியளவில் ஏற்பட்டது. முன்னதாக இந்த நிலநடுக்கத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு 3.7 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ  தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னோடியாக இது இருக்கலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைதளங்களின் மூலம் பொதுமக்கள் குடியிருப்பாளர்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  சிரியாவின் தேசிய நிலநடுக்க மையத்தின் தலைவர் ரேத் அஹ்மத், அரசு சார்பில்  ஷாம் எஃப்எம் வானொலி மூலம் இந்த நிலநடுக்கம் வலுவான நிலநடுக்கத்திற்கு முன்னோடியாக இருக்கலாம் என்று எச்சரித்துள்ளார்.

2023ல் வடக்கு மற்றும் மேற்கு சிரியா, துருக்கியில்  7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் மூலம் 50,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.