டெல்லி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்திரபிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. அதேபோல இமாச்சலப்பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ரவி, பியாஸ், சட்லுஜ், ஸ்வான் மற்றும் செனாப் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் முக்கிய சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல இடங்கள், சாலைகள், பாலங்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுகின்றன. ஏற்கெனவே யமுனை ஆற்று கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். தொடர் மழை பெய்து வருவதால் டெல்லி அரசு மழையினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதனால், வடமாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் யமுனை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அபாய அளவைத் தாண்டியது. இதனால் டெல்லி செங்கோட்டை பகுதி, காஷ்மீரி கேட், யமுனா பஜார், சட்டப்பேரவை வளாகம், தலைமைச் செயலகம், முதலமைச்சர் இல்லம் அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. சில பகுதிகளில் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர் வடிந்து போக்குவரத்து சீரடைந்துவிட்டபோதும், இன்னும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.10,000 நிதி உதவி அளிக்கப்படும் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். ஆதார் அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். ஆடைகள் மற்றும் புத்தகங்கள் அடித்து செல்லப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளிகள் சார்பில் அவை வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார்.








