ஆஸ்கர் தம்பதி பொம்மன், பெள்ளி பராமரித்து வந்த குட்டியானை உயிரிழப்பு..!

தருமபுரியில் தாயை பிரிந்த குட்டி யானை, முதுமலை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்தது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வனப்பகுதியில், கடந்த 16-ஆம் தேதி தாயைப் பிரிந்து கிணற்றில் தவறி விழுந்த…

தருமபுரியில் தாயை பிரிந்த குட்டி யானை, முதுமலை காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வனப்பகுதியில், கடந்த 16-ஆம் தேதி தாயைப் பிரிந்து கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை வனத்துறையினர் பாதுகாப்பாக மீட்டு முதுமலை புலிகள் காப்பகத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு முகாமில், முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் குட்டி யானையை பரிசோதித்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் தாயை பிரிந்து தனியாக தவித்து வந்த ஐந்து மாத ஆண் குட்டி யானையை, அதன் தாயிடம் சேர்க்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் வனத்துறையினரின் அந்த முயற்சி பலிக்கவில்லை.

இதன் பின்னர் அங்குள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன், பெள்ளி தம்பதிகள் மூலம் தனியாக வைத்து பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களின் மேற்பார்வையில் பாதுகாக்கப்பட்டு வந்தது. பிறந்து 5 மாதங்களே ஆன ஆன குட்டி யானைக்கு நாள்தோறும் ‘லாக்டோஜன்’ பால், குளுக்கோஸ் போன்ற திரவ உணவுகள் வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று காலை முதல் அந்த குட்டி யானை உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்து.

இதைத் தொடர்ந்து குட்டியானையின் உடல் நிலையை கண்காணிக்க வண்டலூர் உயிரியல் பூங்கா கால்நடை மருத்துவர் குழு ஆலோசனைப்படி முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் சிகிச்சை அளித்து வந்த நிலையில் ,அந்த குட்டி யானை சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்ததாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் இறந்த குட்டி யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை மேற்கொண்ட பிறகே குட்டி யானை இருந்ததற்கான முழு காரணங்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.