தானாகவே ஓடும் ஸ்கூட்டர் – ஏப்ரல்ஃபூல் இல்லை என ஓலா சிஇஓ அறிவிப்பு!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் தானாக இயங்கக் கூடிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  ஏப். 1-ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டதால் ஏப்ரல் நகைச்சுவை என நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர். இந்திய…

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் தானாக இயங்கக் கூடிய மின்சார ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.  ஏப். 1-ம் தேதி இந்த செய்தியை வெளியிட்டதால் ஏப்ரல் நகைச்சுவை என நெட்டிசன்கள் விமர்சனம் செய்தனர்.

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமான மின்சார இரு சக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒன்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்.  ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் புகழைப் பெற்றுள்ளன.  இ-ஸ்கூட்டர் பிரிவில் ஆரம்பம் முதலே களமிறங்கி கொடிக்கட்டிப் பறக்கும் நிறுவனமாகவும் உள்ளது.  ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் விற்பனை எண்ணிக்கையில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில்,  2024 மார்ச் மாதம் 53,000 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்று,  தொடர்ந்து புதிய உச்சத்தை பதிவு செய்துள்ளது. 

இதனிடையே, ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ ஓர் பதிவை தனது ட்விட்டர் (எக்ஸ்) தளத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் அவர் கூறியிருந்ததாவது,  நேற்று (ஏப். 1) புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் அறிவித்திருந்தார். அவர் ஓர் புதிய தயாரிப்பு என்று மட்டுமே குறிப்பிட்டிருந்தார்.  எனவே, ஓலா என்ன தயாரிப்பை விற்பனைக்குக் கொண்டு வரும் என்பதே பலரின் சந்தேகமாக அமைந்து இருக்கின்றது.

https://twitter.com/bhash/status/1774735780201836615

இந்நிலையில், ‘ஓலா சோலோ’ என புதுமையான மின்சார ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.  சோலோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழில்நுட்பம் நிரம்பியுள்ளது,  அதிநவீன AI திறன்களை ஒருங்கிணைத்து,  புத்திசாலித்தனமான, பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான சவாரி ஆகியவற்றை கொண்டது.  உள்நாட்டில் உருவாக்கப்பட்ட சிப், LMA09000 மூலம் இது இயக்கப்படுகிறது.  இந்த சோலோ, தெருக்களில் செல்ல செயற்கை நுண்ணறிவின் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. 

குறிப்பாக, செல்ஃப் சார்ஜிங் (தானாக சார்ஜாகும்) திறன் வழங்கப்பட்டு இருக்கிறது.  சார்ஜ் குறைந்துவிட்டால் அருகில் இருக்கும் சார்ஜிங் பாயிண்டைத் தேடி சென்று தன்னைத் தானே அது சார்ஜ் செய்துக் கொள்ளும். இதற்காக எலெக்ட்ரோ ஸ்நூஸ் குவாண்டம் எனும் அம்சத்தை சோலோவில் ஓலா வழங்கி இருக்யுள்ளது.  முகத்தைக் கண்டறியும் அம்சம், ஹெல்மெட் இருந்தால் ரைடு ஸ்டார்ட் செய்யும் வசதி, லிடார் (Light Detection and Ranging), ரேடார், கேமிரா சிஸ்டம், மற்றும்அல்ட்ரா சோனிக் சென்சார் ஆகிய அம்சங்களையும் இது உள்ளடக்கியது.

https://twitter.com/bhash/status/1775058174824820946

இத்தகைய திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நேற்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம்  வெளியீடு செய்தது. அத்துடன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தானாக இயங்கும் வீடியோவையும் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டது. ஆனால், இந்த வீடியோவைப் பார்த்த பலர் இது முட்டாள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டது என கருத்து தெரிவித்தனர்.

நேற்று ஏப்ரல் 1 என்பதாலேயே பலர் இவ்வாறு கருத்து தெரிவித்து இருக்கின்றனர். ஆனால், “இது போலி அல்ல. இது எங்களின் தொழில்நுட்பம்” என ஓலா நிறுவனத்தின் சிஇஓ தெரிவித்து இருக்கின்றார். எனவே எதிர்காலத்தில் ஓலா நிறுவனம் இந்த தானாக இயங்கும் சோலோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வரும் என தெரிகின்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.