இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் ஹாசன் தயாரித்து நடித்த படம் தான் விக்ரம்.
நடிகர் கமல் ஹாசன் கட்சிப் பணிகளில் மூழ்கியிருந்ததால் படத்தில் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்த படம் விக்ரம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது.
எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் படமும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு படம் விக்ரம் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோரும் நடித்திருந்தனர். அனிருத் இசை ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. படத்தில் இடம்பெற்ற சண்டைக் காட்சிகளும் அனைவரையும் கவர்ந்தது.
படம் வெற்றி அடைந்ததால் மகிழ்ச்சி அடைந்த நடிகர் கமல்ஹாசன் இயக்குநருக்கு விலை உயர்ந்த காரை பரிசாக வழங்கினார். கெளரவ வேடத்தில் நடித்துக் கொடுத்த சூர்யாவுக்கு ரோலெக்ஸ் வாட்ச்சை பரிசாக அளித்து மகிழ்ந்தார் கமல்.
திரைப்படம் வெளியாகிய 10 நாட்களில் ரூ.300 கோடி வசூல் சாதனை புரிந்து சாதனை படைத்துள்ளது.
திரைப்படங்களை உன்னிப்பாக கவனித்து வரும் ரமேஷ் பாலா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், “விக்ரம் படம் உலக அளவில் ரூ.300 கோடி வசூல் சாதனை படைத்தது. இரண்டாவது வார முடிவில் ரூ.300 கோடியைத் தாண்டியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரூ.300 கோடி வசூல் சாதனை படைத்த தமிழ் படங்களில் விக்ரம் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.0 படம் முதலிடத்திலும், கபாலி, எந்திரன் ஆகிய படங்கள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன. ரூ.300 கோடி வசூல் சாதனை புரிந்த முதல் மூன்று தமிழ் படங்களிலும் ரஜினி கதாநாயகனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/rameshlaus/status/1536239746233511941
-மணிகண்டன்








