கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, கடந்த ஆண்டில் மட்டும் 1,854 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றுள்ளார். இது கூகுள் நிறுவனத்தில் பணியாற்றும் சராசரி ஊழியரை விட 800 மடங்கு ஊதியம் அதிகமாகும்.
தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்தவர் தான் இந்த சுந்தர் பிச்சை. தொழில்நுட்ப படிப்பில் ஆர்வம் கொண்ட இவர், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பை நிறைவு செய்தார். பின்னர் 2004-ஆம் ஆண்டு கூகிள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்த இவரின் தனித்துவமான திறமையையும், மாறுபட்ட வித்யாசமான சிந்தனையையும் கண்ட கூகிள் நிறுவனம், அதனை அங்கீகரிக்கும் வகையில் 2015-ஆம் ஆண்டு கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஆகிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக பதவியில் அமர்த்தியது. ஒரு இந்தியர், அதுவும் தமிழ்நாட்டில் ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஒருவர் இந்த அளவிற்கு உயர்ந்திருப்பதை கண்டு பலரும் ஆச்சர்யப்பட்டு பேசினர். இவரின் இந்த வளர்ச்சி இந்தியாவிற்கு மட்டுமின்றி தமிழகத்திற்கும் பெருமை சேர்த்தது.
தற்போது வரை பல்வேறு முன்னெடுப்புகளோடு, ஒவ்வொரு நாளும் வித்யாசமான சிந்தனைகளோடு பணியை மேற்கொண்டு வரும் சுந்தர் பிச்சையின் கடந்த ஆண்டு வருமானம் மட்டும் எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் வெளியாகி தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. சுந்தர் பிச்சையின் கடந்த 2022-ஆம் ஆண்டு ஊதியம் 1,854 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. அதாவது சுந்தர் பிச்சை ஒவ்வொரு மாதமும் சராசரியாக 154 கோடி ரூபாய் ஊதியமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரின் இந்த ஊதியம், அந்நிறுவனத்தில் பணியாற்றும் சராசரி ஊழியரை விட 800 மடங்கு அதிகமாகும். அதே போல் சுந்தர் பிச்சை தனது ஊதியத்தில் ஆயிரத்து 788 கோடி ரூபாயை ஊக்கத்தொகையாக பெற்றுள்ளாராம். அதாவது நிறுவனத்தின் இலக்குகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததற்காக இந்த தொகை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக சொல்லபப்டுகிறது.
அண்மையில் தான் ஆல்பபெட் நிறுவனம் நிதிச்சுமையை குறைப்பதற்காக 12 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. இந்த நிலையில், சுந்தர் பிச்சைக்கு ஊதியமாக வழங்கப்பட்டுள்ள இந்த தொகை விவாத பொருளாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- பி.ஜேம்ஸ் லிசா








