உரிய முன்னறிவிப்பு இன்றி எல்லை பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வருகிறது. அங்குள்ள மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். அதுவும் குறிப்பாக மெட்ரோ சுரங்க பாதைகளில் மக்கள் பதுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அங்கு மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வசிக்கின்றனர்.
இவர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் உள்ள இந்தியர்கள் எல்லைக்கு செல்ல வேண்டாம் என்று இந்திய தூதரகம் கூறியுள்ளது.
இது குறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
எல்லையை நோக்கி செல்வதை விட க்ரைனின் மேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களில் இருப்பதே பாதுகாப்பானது. அதோடு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் இருப்பவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை தங்கள் குடியிருப்புகளிலேயே இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியர்கள் தேவையின்றி வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ள இந்திய தூதரகம், உரிய முன்னறிவிப்பு இன்றி எல்லை பகுதிகளுக்கு இந்தியர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.









