திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “காய்ச்ச மரம் தான் கல்லடிபடும் என்பது போல திமுகவை பழிக்கிறார்கள் , தற்போதைய ஆட்சியில் சொல்வதற்கு சாதனைகள் ஏதும் இல்லை என்பதால் இல்லாததை, இருப்பது போல சித்தரிக்கிறார்கள் என்றார்.
வரலாற்று ஆவணங்கள் இருந்தாலும் அதனை மறைத்து கட்டுக்கதைகளை வெளியிடுகிறார்கள் எனவும், மாயாவி போல அலையும் இந்த அரசின் பொய் முகம் விரைவில் கிழித்து எரியப்படும் என்றார். ஆவணங்களின் பேரில் வழக்கு பதிந்தால், அதன் மீது சட்டப்போராட்டம் நடத்தி அப்பழுக்கற்றவர்கள் என நிரூபிக்க தயாராக உள்ளதாக ஏற்கனவே சவால் விட்டுள்ளோம் எனவும், சட்டமன்றத்தில் 3 பைல்கள் இருப்பதாக கூறி அதனை திறந்து புஸ்வானமாக மாறிவிட்டது என்றார்.
ஸ்ரீரங்கம் கோவில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது குறித்த கேள்விக்கு, முழு விசாரணைக்குப் பிறகு தவறு நடந்துள்ளதா இல்லையா என தெரியவரும் என்றும், அமைச்சர் என்பதால் அவரது பேட்டி ஊடகங்களில் வந்துள்ளது, குற்றம் சாட்டப்பட்டவர் பேட்டி வரவில்லை என்றும், தவறு இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் வரவேற்க தயார் என்றார்.
இடைத்தேர்தலில் வெற்றி என்ற நம்பிக்கையுடன் திமுக பயணித்துக் கொண்டிருக்கிறது. மரணப்படுக்கையில் தள்ளப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் வகையிலும் குதிரை பேரத்தை ஒழிக்கின்ற முயற்சியிலும் திமுக களத்தில் நிற்கும் என்று கூறினார்.




