முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

இந்தி திணிப்பு எதிர்ப்பில் திமுக கடந்து வந்த பாதை….


எஸ்.இலட்சுமணன்

”இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணித்து விடாதீர்கள்…எங்கள் தாய் மொழி உணர்வு என்கிற நெருப்பை உரசிப் பார்க்காதீர்கள்” என சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு காட்டமாக எச்சரிக்கைவிடுத்தார்.  அந்த எச்சரிக்கையில் உள்ள வீரியம் எத்தகையது என்பதை மத்திய பாஜக அரசுக்கு எடுத்துக்காட்டுவதற்காக திமுக இளைஞரணியும், மாணவரணியும் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக ஒரு அடையாள போராட்டத்தையும் இன்று நடத்தி முடித்திருக்கிறது.

இந்த நேரத்தில் திராவிட இயக்கங்களை தமிழகத்தில் வேரூன்ற செய்த, திமுகவை ஆட்சிக் கட்டிலில் முதல் முறையாக அமரவைத்த, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில்  காங்கிரஸ் அரியணையில் ஏற முடியாமல் இருக்கும் சூழல்நிலைக்கு வித்திட்ட  மொழிப்போர் கால நினைவுகளை ஒரு முறை திரும்பிப் பார்போம்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் முதல் பிரளயம் 1938ம் ஆண்டு ராஜாஜி ஆட்சி காலத்தில்தான் வெடித்தது. 1937ம் ஆண்டு ஜூலை 14ந்தேதி சென்னை மாகாண முதலமைச்சராக முதல் முறையாக பதவியேற்ற ராஜாஜி, இந்தி மொழியை கட்டாய பாடமாக்கும் வகையில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். சென்னை மாகாணத்தில் உள்ள 125 உயர் நிலைப்பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்கி 1938ம் ஆண்டு உத்தரவு ஒன்றையும் அமல்படுத்தினார். இதனை எதிர்த்து தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டங்களை நடத்தின. இந்த போராட்டங்களில் பெரியாரோடு இணைந்து பங்கெடுத்தார் அண்ணா.  1938ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா ஆற்றிய எழுச்சி உரை இந்தி மொழி ஆதிக்கத்திற்கு எதிராக தமிழக இளைஞர்களை கிளர்ந்தௌச் செய்தது.

இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றதற்காக இரண்டு முறை கைது செய்யப்பட்ட அண்ணா மொத்தம் 13 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். இந்த முதல் மொழிப்போர் காலக்கட்டத்தில் பெரியாருக்கு 19 மாதங்கள் சிறைவாசம் கிடைத்தது.  இந்தி எதிர்ப்பு போராட்டக்களத்தில் தமிழுக்காக நிகழ்த்தப்பட்ட முதல் உயிர் தியாகமும் இந்த காலக்கட்டத்தில்தான் நிகழ்ந்தது.  சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்த்தில் பங்கேற்று சிறை சென்ற நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மன்னிப்புக்கோரினால் விடுதலை செய்வோம் என அரசு கூறியது. ஆனால் தமிழுக்காக உயிர்துறக்கவும் தயாராக இருந்த நடராஜன் அரசு விடுத்த அழைப்பை நிராகரித்தார். சிறைக்கொடுமைகளுக்கிடையே 1939ம் ஆண்டு ஜனவரி 15ந்தேதி சிறையிலேயே உயிரிழந்தார் நடராஜன்.

இந்திக்கு எதிரான போராட்டத்தில் தமிழகத்தின் முதல் மொழிப்போர் தியாகியாக  வரலாற்றில் நடராஜன் நினைவுகூறப்படுகிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும் அதே ஆண்டு மார்ச் மாதம் 12ந்தேதி சிறையில் உயிரிழந்து மொழிப்போர் தியாகிகளின் பட்டியலில் சேர்ந்தார்.  இந்த உயிர் பலிகள் எதிரொலியாக இந்தி எதிர்ப்பு போராட்டம் சென்னை மாகாணத்தில் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் 1940ம் ஆண்டு இந்தியை கட்டாயப் பாடமாக்கிய அரசாணை திரும்பப் பெறப்பட்டது.

சுதந்திரத்திற்கு பின்னர் 1948ம் ஆண்டு  சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்ற  ஓமந்தூரார் பிறப்பித்த உத்தரவு ஒன்று இந்தி திணிப்புக்கு எதிரான அதிருப்தி குரலை மீண்டும் தமிழகத்தில் ஒலிக்கச் செய்தது. திராவிடர் கழகம் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தளகர்த்தராக அண்ணா தலைமை தாங்கினார். அண்ணாவும், கருணாநிதியும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டனர். அப்போது இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

 

 

 

1949ம் ஆண்டு  பெரியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் திராவிடர்கழகத்திலிருந்து பிரிந்து வந்து திமுகவை றிறுவினார் அண்ணா. எனினும் இந்தி எதிர்ப்பு போராட்டக் களங்கள் திராவிடர் கழகத்தையும், திமுகவையும்  ரயில் தண்டவாளத்தின் இரு கம்பிகளைப் போல் இணைத்தே பயணிக்க வைத்தன. 1952ம் ஆண்டு வாக்கில் தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் தமிழ் பின்னுக்கு தள்ளப்பட்டு இந்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து  இந்தி எழுத்துக்களை தார்பூசி அழிக்கும் போராட்டத்தில் திமுகவும், திராவிடர் கழகழும் களம் இறங்கின. பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் தமிழகமெங்கும் நடைபெற்ற போராட்டங்களின்போது 500க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இந்தி எழுத்துக்கள் தார்பூசி அழிக்கப்பட்டன. இந்த போராட்டங்களில் பங்கெடுத்ததால் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராணுவத்தினர் எத்தனையோ போர்க்களங்களில்  களமிறங்கியிருப்பார்கள் அவர்களை 1965ல் மொழிப்போரில் களம் இறக்கியது தமிழகம். ஆம்…போராட்டத்தை ஒடுக்குவதற்கு ராணுவமே வந்து களமிறங்கும் அளவிற்கு 1965ம் ஆண்டில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டக்களம் மிகவும் உக்கிரமாக இருந்தது. 1963ம் ஆண்டு இயற்றப்பட்ட ஆட்சி மொழி சட்ட மசோதா இந்த பிரளயத்திற்கு வித்திட்டது. இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக்கும் வகையில் இயற்றப்பட்ட இந்த சட்டமசோதாவைக் கண்டித்து 1964ம் ஆண்டு ஜனவரி 25ந்தேதி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த சின்னச்சாமி என்கிற திமுக தொண்டர் தீக்குளித்தார். திருச்சி ரயில் நிலையம் எதிரே அவர் தீக்குளித்து தனது உயிரை மாய்த்தார். அவரது மரணம் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் இருந்த அரசியல் எல்லைகளையெல்லாம் உடைத்தெறிந்து அதனை ஒரு மக்கள் இயக்கமாகவும், மாணவர் இயக்கமாகவும் உருவெடுக்கச் செய்தது.

1965ம் ஆண்டு ஜனவரி 25ந்தேதி சின்னச்சாமி நினைவு நாள் நெருங்க நெருங்க இந்தி எதிர்ப்பு உணர்வு தமிழகத்தில் மேலோங்கிக்கொண்டே வந்தது. சின்னச்சாமியின் நினைவு நாள் அன்று பெரும் கிளர்ச்சியாக இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்தது. தமிழ்நாடு முழுவதும் மாணவர் இயக்கங்களின் கொந்தளிப்பு விஸ்வரூபம் அடைந்தது. அண்ணா, கருணாநிதி, உள்ளிட்ட தலைவர்களின்   பேச்சுக்கள் இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தில் மாபெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அப்போது திமுக மாணவர் அமைப்புகளில் இருந்த எல்.கணேசன், துரைமுருகன், வைகோ, விருதுநகர் பெ.சீனிவாசன் உள்ளிட்டோர் மாணவர் போராட்டங்களை பின்னணியிலிருந்து இயக்கினர். போராட்ட அனல் பற்றி எரிந்துகொண்டிருந்த நிலையில் சென்னையில் சிவலிங்கம், அரங்கநாதன், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் முத்து என அடுத்தடுத்து பலர் தங்கள் உயிரை மாய்துக்கொண்டது இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டக்களத்தில் கொந்தளிப்பை அதிகப்படுத்தியது. இளைஞர் இப்படி தங்கள் உயிரை மாய்த்துக்கொள்வதால் அண்ணா வேதனை அடைந்தார். பிரச்சனைக்கு தீர்வு காண இப்படி உயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என அவர் வேண்டுகோள் விடுத்தார். அதே நேரம் போராட்டக்களத்தில் போலீசார் மற்றும் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமான இளைஞர்கள் பலியானார்கள். இப்படி இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகி நிலைமை மிகவும் மோசனமானதை உணர்ந்த அண்ணா போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அறைகூவல் விடுத்தார். எனினும் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது.

தமிழகத்தில் நிலவும் இந்தி எதிர்ப்பு உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களான சி.சுப்பிரமணியம்,  அழகேசன் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இதையடுத்து வேறுவழியின்றி தனது முடிவை மாற்றிக் கொண்டது லால்பதூர் சாஸ்திரி தலைமையிலான மத்திய காங்கிரஸ் அரசு. இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சிமொழியாக தொடரும் என்று அறிவித்தது. 1965 ஜனவரி 25ந்தேதி தொடங்கி தொடர்ந்து 50 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் மார்ச் 15ந்தேதி முடிவுக்கு வந்தது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் எதிரொலியாக அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியும் முடிவுக்கு வந்தது. 1967ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 179 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அண்ணா தலைமையில் திமுக ஆட்சி தமிழகத்தில் முதல் முறையாக அமைந்தது.

அண்ணா மறைவிற்கு பின் திமுகவிற்கு தலைமையேற்ற கருணாநிதி, மத்திய அரசு இந்தியை திணிக்க முயல்வதாக  தான் கருதும்போதெல்லாம் அந்த முயற்சிக்கு எதிராக வலுவான எதிர்ப்புக்குரலை பதிவு செய்தே வந்துள்ளார். 1986ம் ஆண்டு ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது, மத்திய அரசு அலுவலகங்களுக்கு இனி இந்தியில்தான் டெல்லியிலிருந்து தகவல் தொடர்பு வரும் என்கிற அறிவிப்பு வந்தபோது அதனை வன்மையாக கண்டித்தார் கருணாநிதி. இந்தி ஆதிக்க எதிர்ப்பு மாநாட்டை திமுகவின் சார்பில் நடத்தினார். அப்போது நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் அந்த காலகட்டத்தில் திமுகவின் இளைஞரணிச் செயலாளராக இருந்தவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் பங்களிப்பும் முக்கியமானதாக அமைந்தது.  பின்னர் திமுகவின் இளைஞரணிக்கு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற காலத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பப்பட்டு வருகிறது. “இந்தி தெரியாது போடா” என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டீ சர்ட் அணிவதில் தொடங்கி பல்வேறு விதங்களில் இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வரும் உதயநிதி ஸ்டாலின், இன்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, இந்தி திணிப்புக்கு எதிராக டெல்லியில் வந்து போராடவும் தயார் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அண்ணா காலம் தொடங்கி, திராவிட மாடலை தூக்கிபிடித்து கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தி வரும் மு.க.ஸ்டாலின் காலம் வரை இந்தி எதிர்ப்பு என்பது திமுகவின் அரசியல் பயணத்தில் ஒரு அங்கமாகவே ஐக்கியமாகி வந்திருக்கிறது.

-எஸ்.இலட்சுமணன்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

2022-ம் ஆண்டு தமிழ் படங்களில் அதிக வசூல் சாதனை படைத்தது பொன்னியின் செல்வன்

EZHILARASAN D

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு- உயர்கல்வித்துறை

G SaravanaKumar

ஆந்திரா – ஒடிசா இடையே இன்று கரையை கடக்கிறது ’குலாப்’

EZHILARASAN D