”திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக ஒரு பேருந்துகூட வாங்கவில்லை” – இபிஎஸ் குற்றச்சாட்டு

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக ஒரு பேருந்துகூட வாங்கவில்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.   சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த அமரகுந்தியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுக…

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாக ஒரு பேருந்துகூட வாங்கவில்லை என எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.  

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த அமரகுந்தியில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அக்கட்சியில் இணையும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க வந்த, எடப்பாடி பழனிசாமிக்கு தாரமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்த  60 அடி உயர கொடிக்கம்பத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.

இதனை அடுத்து அதிமுகவில் இணைந்தோர் முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

அதிமுகவின் எக்குக்கோட்டையாக சேலம் மாவட்டம் திகழ்கிறது. அதிமுக வரலாறு படைத்த இயக்கம். அதிமுக ஆட்சியில் இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்தது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எத்தனையோ பிரச்சனைகளை உருவாக்கிப் பார்த்தார்கள். அதிமுகவிற்கு தமிழகத்தில் இடமில்லை என கூக்குரலிட்டனர். கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பாக்கியத்தை நாம் இழந்தோம். கட்சியை காட்டிக்கொடுத்தது யார் என்று உங்களுக்கு தெரியும். மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்று கட்சிக்குள்ளே எட்டப்பர்கள் இருந்தனர்.அவர்கள் அனைவரும் தற்போது வெளியேறியுள்ளனர்.

களையாக இருந்தவர்கள் தற்போது அதிமுகவிலிருந்து கலைந்து சென்றுள்ளனர். அதிமுகவை அழிப்பதற்கு, உடைப்பதற்கு, முடக்குவதற்கு இன்றைய முதலமைச்சர் எவ்வளவோ முயற்சி செய்தார். அவை அனைத்தும் மக்களோடு துணையோடு முறியடிக்கப்பட்டுள்ளது. அதிமுகவை எந்த கொம்பனாலும் அசைத்துப் பார்க்க முடியாது. அதிமுக கூட்டம் நடத்தக்கூடாது என திமுகவினர் தடை போடுகின்றனர். சீப்பை ஒழித்து வைத்தால் திருமணம் நின்று விடாது.

முதலமைச்சர் சேலம் மாவட்டத்திற்கு மூன்று முறை வருகை தந்துள்ளார். சேலம் மாவட்டத்தில் என்ன திட்டங்களை கொண்டு வந்தார். நாம் கொண்டு வந்த திட்டங்களை ரிப்பன் வெட்டி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை தான் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று மேட்டூர் உபரி நீர் திட்டத்தை கொண்டு வந்தோம் திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாட்டு மக்களைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் முதல்வருக்கு கவலை இல்லை. தன் குடும்பத்தை பற்றி மட்டும் தான் முதல்வருக்கு கவலை. உண்மையிலேயே உங்களுக்கு மனசாட்சி இருந்தால் விவசாயி படும் கஷ்டம் உங்களுக்கு தெரிந்திருக்கும்.

விவசாயிகளுக்கான திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் உண்மையிலேயே அனைவரும் பாராட்டி இருப்பார்கள். தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.ஆட்சி எப்பொழுது போகும் என மக்களின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் புதிதாக ஒரு பேருந்துகள் கூட வாங்கப்படவில்லை. பேருந்துகள் அனைத்தும் சிதலமடைந்துள்ளன. அரசுக்கு கவனம் இல்லை. அதிமுக ஆட்சியில் தலைவாசல் அருகே ஏழாயிரம் கோடி ரூபாயில் ஆசியாவிலேயே பிரம்மாண்டமான கால்நடை பூங்கா கொண்டு வந்தோம். தமிழ்நாட்டில் ஆறு சட்டக் கல்லூரிகள் கொண்டு வந்தோம்.

முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். முப்பதாயிரம் கோடி ரூபாயை துபாயில் முதலீடு செய்வதற்காக முதல்வர் சுற்றுலா சென்றார். முப்பதாயிரம் கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் ஸ்டாலின் குடும்பத்தினர் தடுமாறி வருவதாக அமைச்சர் கூறி உள்ளார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மூன்றாவது ஆடியோ வெளியானால் ஸ்டாலின் கோட்டையை விட்டு வெளியே செல்லும் நிலை ஏற்படும்.

செந்தில் பாலாஜியை யாரும் பழிவாங்கவில்லை. ஏன் பதறிப் போய் செந்தில் பாலாஜியை பார்க்க வேண்டும். திமுகவில் 60 ஆண்டு காலம் உழைத்த அமைச்சரை நேரில் போய் பார்க்கவில்லை. முதலமைச்சர் நாடகத்தை அரங்கேற்றி மத்திய அரசு மீது குற்றம் சாட்டுகிறார். கைதியாக இருப்பவர் அமைச்சராக இருக்கலாமா? செந்தில் பாலாஜியை ஏன் பாதுகாக்கிறீர்கள். தமிழ்நாட்டிற்கு தலைகுணிவு.மிகப்பெரிய தியாகம் செய்து நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தாரா? அவருக்கு இலாகா இல்லாத அமைச்சர் பதவி கொடுத்திருப்பது சரியா? ஊழல் செய்தவருக்கு இலக்கா இல்லாத அமைச்சர் பதவியா? மக்கள் வரிப்பணத்தில் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கலாமா?

தார்மீக பொறுப்பேற்று செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் எதிர்வினைகளை எதிர்காலத்தில் சந்திக்க நேரிடும்.  ஊழல் செய்வதில் தமிழ்நாடு முதல் மாநிலமாக விளங்குகிறது. அரச பரம்பரை போல் நினைத்து கொண்டு வாரிசு அரசியல் செய்கின்றனர். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி பிறகு இன்பநிதியா? குடும்பத்தில் உள்ளவர்களே அடுத்தடுத்து முதலமைச்சர் ஆவது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து. ஆட்சி விரைவில் கவிழ போகிறது. அமலாக்க துறையினர் தயாராக உள்ளனர்.

தமிழ்நாட்டில் நிறைய சாதனை படைத்தது போல் தற்போது தேசிய அரசியலுக்கு சென்றுள்ளார். பாட்னா கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளார் முதல்வர். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கேயே ஆட்சி செய்ய முடியாத முதலமைச்சர் நாட்டின் பிரதமரை தேர்வு செய்வாரா?

விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது. அதிமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். திமுக அரசுக்கு சம்பட்டி அடி கொடுங்கள். திமுக எம்பிக்கள் என்ன செய்தார்கள். அதிமுக எம்பிகள் கடந்த முறை 29 நாட்கள் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கினர். திமுக எம்பிகளுக்கு திராணி உள்ளதா? காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டது அதிமுக அரசு. தமிழ்நாட்டு மக்களுக்கு 38 எம்பிகளால் எந்த பயனும் கிடையாது. என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.