”ஆர்.பி. உதயகுமார் உடனான சந்திப்பு நட்பு ரீதியானது”- பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!

முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் உடனான சந்திப்பு நட்பு ரீதியானது என்று தேமுதிக பொதுச்செயளாலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் இன்று தேமுதிக சார்பில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டார். ஆலோசனைக்கு பின் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,

”திமுக 95% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக கூறலாம். ஆனால் அதனை எதிர்க்கட்சிகளோ, மக்களோ ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதுதான் உண்மை. தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் இந்த முறை ஆட்சி அமைக்கும்.

இன்று தமிழக முழுவதும் எஸ்.ஐ.ஆர் பேசப்படுகிறது. தேர்தல் நேரத்தில் இந்த மாதிரி குற்றச்சாட்டு வருவது இது முதல் முறை கிடையாது. இதை சரியாக கொண்டு செல்வது தேர்தல் ஆணையத்தின் வேலை. எல்லோருக்கும் வாக்குரிமை தரப்பட்டு நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்பதுதான் தேமுதிகவின் நிலைப்பாடு.

நாளை பிரதமர் மோடி கோவை வருவதை வரவேற்கிறேன். விவசாயிகளுக்காக விவசாய மாநாட்டில் அவர் கலந்து கொள்வதை நான் பெருமையாக பார்க்கிறேன். விவசாயம் நன்றாக இருந்தால் தான்  நாடு நல்லா இருக்கும்.

தேமுதிக கூட்டணி என்பது பத்திரிக்கையாளர்களுக்கு தான் சஸ்பென்ஸ். இப்போதைக்கு எங்கள் பணி என்பது  கட்சி வளர்ச்சி. வருகிற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். தேர்தல் கூட்டணி யாருடன் என்பது குறித்து உரிய நேரத்தில் தேமுதிக அறிவிக்கும்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கேள்வி குறியாக உள்ளது. தமிழகத்தில் எல்லா வித போதை வஸ்த்துக்களும் நடமாடிக் கொண்டு இருக்கிறது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத காரணத்தால் பல்வேறு பிரச்சனைகள் நிலவிக் கொண்டிருக்கிறது. இதற்கு ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர், “நேற்று ஆர்.பி. உதயகுமார் உடனான சந்திப்பு என்பது நட்பு ரீதியான சந்திப்பு. வேற எதுவும் கிடையாது” எனவும் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.