கல்விக் கடனை ரத்து செய்ய தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா உடனான…

உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று தேமுதிக நிறுவனத் தலைவர், பொதுச் செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தேமுதிக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ரஷ்யா உடனான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பியுள்ளனர். உக்ரைன் நாட்டில் படிக்க இந்திய மாணவர்கள் 1,387 பேர் இந்திய வங்கிகளில் கல்விக் கடன் பெற்றுள்ளனர். அதில், 133 கோடி ரூபாய் நிலுவை இருப்பதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மாணவர்களின் கல்வி சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக நீட்டிக்கப்படும்பட்சத்தில் மாணவர்கள் கல்விக் கடனை செலுத்துவதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்படுவதாகவும் மத்திய நிதி அமைச்சகத்தின் எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படிப்பைத் தொடர முடியாமல் மாணவர்கள் மன உளைச்சலில் இருக்கின்றனர். உக்ரைனில் நடந்து வரும் போர் காரணமாக மாணவர்களை அந்நாட்டிற்கு அனுப்பவும் பெற்றோர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மேலும், நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களை இந்தியாவில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்க தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை. இதுபோன்ற சூழலில் மாணவர்களால் எப்படி கல்விக் கடன் செலுத்த முடியும். எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்திய மாணவர்களை இந்தியாவிலேயே படிப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அந்த மாணவர்கள் படிப்பை இங்கேயே தொடர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.