அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடா? என்ற கேள்விக்கு எஸ்.பி. வேலுமணி விளக்கமளித்துள்ளார்.
அதிமுக தலைமை நிலைய செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“அதிமுக உலகத்திலேயே 7-வது கட்சி. இந்தியாவில் மிகப்பெரிய கட்சி. எனக்கும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் பிளவு என எழுதுகின்றனர். எங்களுக்குள் எந்த குழப்பமும் கிடையாது. குழப்பம் செய்தவர்கள் எல்லாம் வெளியே போய்விட்டனர்.
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா இணைப்பு சாத்தியமில்லை. அதிமுகவில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவை சேர்ப்பது போன்ற பிம்பத்தை சிலர் ஏற்படுத்துகிறார்கள். திமுக ஐடி குழுவினர் தவறான செய்திகளை பரப்புகின்றனர். அதனை ஊடகங்களும் செய்திகளாக பதிவிடுகின்றன. அதிமுகவின் பல்வேறு உட்கட்சி பூசல்கள் இருப்பதாக பல ஊடகங்கள் கற்பனையாக செய்திகளை வெளியிடுகின்றன.
கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. கட்சிக்குள் எந்த பிரச்னை வந்தாலும், அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்த பின்பு, தான் அவர் எந்த முடிவையும் எடுப்பார். கடந்த 3 ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பொறுப்பு ஏற்ற, உடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.








