ரயிலில் அடிபட்டு, முன் கால்களை இழந்த மும்பை தெரு நாய் ஒன்று நெதர்லாந்துக்கு சென்றிருக்கிறது.
மும்பையில் ஜாலியாக சுற்றித்திரிந்த தெரு நாய் ஒன்று, காந்திவிலி -போரிவிலி ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே விபத்தில் சிக்கியது. இதில் அந்த நாயின் முன் கால்கள் இரண்டு துண்டாயின. இதையடுத்து விலங்கு ஆர்வலர்கள் சிலர், அதை மீட்டு சிகிச்சை அளித்தனர். இந்தச் சம்பவம் நடந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது.
மும்பையை சேர்ந்த செயற்பாட்டாளர் சாக்ஷி சட்கர் மற்றும் தன்வி கடேகர் இணைந்து அந்த நாய்க்கு மற்றொரு வாழ்க்கையை கொடுக்க உதவினர். அதற்கு போரிஸ் என்று பெயரிட்டனர். சாக்ஷி, இந்த தெருநாய் விபத்தில் சிக்கியது பற்றி சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டார். தன்வி, மருத்துவ சிகிச்சைக்காக நிதி திரட்டினார். அதன் மூலம் நாய்க்கு சிகிச்சை அளித்துக் காப்பற்றினர்.
இதுபற்றி தகவல் தெரிந்ததும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள விலங்குகள் நல ஆர்வலர், இரேனே வான் ராட்ஷூவன் (Irene Van Raadshooven), இந்த தெரு நாயை தத்தெடுக்க முடிவு செய்து, இவர்களை தொடர்பு கொண்டார். அதோடு முன் கால்களை இழந்த அந்த நாயை, ஆம்ஸ்டர்டாம் அழைத்துச் செல்லவும் முடிவு செய்தார்.
ஆனால், கடந்த வருடம் வந்த கொரோனாவின் தாக்கம், போரிஸின் ஆம்ஸ்டர்டாம் பயணத்தை தடுத்துவிட்டது. இதையடுத்து சமீபத்தில் ஆம்ஸ்டர்டாம் பறந்திருக்கிறது, போரிஸ்!
போரிஸை அவர் தத்தெடுக்க என்ன காரணம்? இரேனே சொல்கிறார்: ‘முதன்முதலா போரிஸை நான் பார்த்ததுமே, அது என் மனசை தொட்டுடுச்சு’.







