நடிகர் சிவகார்த்திகேயன் 40, 50 ஆண்டுகள் சினிமா துறையில் இருக்க வேண்டும் என சாபம் விடுகிறேன் என இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. இந்த படத்தை ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்குகிறார். இந்த படத்தில் இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘ஆடை’, ‘மண்டேலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அதிதி, இயக்குநர் மடோன் அஸ்வின், மிஷ்கின், நடிகை சரிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குநர் மிஷ்கின் கூறியதாவது,
“நடிகை சரிதாவுடன் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் சினிமா துறைக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் பார்த்ததில் மிகவும் ஒழுக்கமான மனிதர் சிவகார்த்திகேயன்.
படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சி முடிந்த பின்னும் சண்டைக் காட்சிகளில் ஈடுபட்ட அனைவரிடமும் சிவகார்த்திகேயன் மன்னிப்பு கேட்பார் . என்ன ஒரு அருமையான மனிதர் அவர். சிவகார்த்திகேயன் இன்னும் 40, 50 ஆண்டுகள் சினிமா துறையில் இருக்க வேண்டும் என சாபம் விடுகிறேன்.
இந்த படத்தில் நான் வில்லனாக நடித்துள்ளேன். நிறைய பேர் என்னை நிஜ வாழ்க்கையில் வில்லனாக தான் பார்க்கிறார்கள். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க வைத்ததற்கு இயக்குனருக்கு நன்றி.” இவ்வாறு மிஷ்கின் தெரிவித்தார்.







