லோகி- கமலின் விக்ரமால் தள்ளிப்போன யானை!

சேவல், சிங்கம், வேங்கையை தொடர்ந்து இயக்குநர் ஹரி எடுத்திருக்கும் அடுத்த அவதாரம் தான் ‘யானை’. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து அருண் விஜய், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் படம்…

சேவல், சிங்கம், வேங்கையை தொடர்ந்து இயக்குநர் ஹரி எடுத்திருக்கும் அடுத்த அவதாரம் தான் ‘யானை’. ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்து அருண் விஜய், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் படம் யானை. ஹரி படம் என்றாலே விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகள், ஆக்ரோஷமான வசனங்கள், 10 அடிக்கு பறக்கும் வில்லன்கள் என ரகளையான மசாலாவாக இருக்கும். 2 நிமிட ட்ரெய்லர்களிலே 200 ‘பஞ்ச்’கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் யானை படத்தின் ட்ரெய்லர் காட்சிகளில் வழக்கமான ஹரி முத்திரைகள் இருந்தாலும் அருண் விஜயின் ஒரே ஒரு வசனம் மட்டும் இடம்பெற்றிருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் படத்தை பற்றி நிழ்ச்சி ஒன்றில் பேசியிருந்த ஹரி, முந்தைய படங்களை போல் அதி வேகமாக இல்லாமல் சற்று நிதானமாக செல்லும் வகையில் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சிங்கம் 2-வின் வெற்றிக்கு பிறகு ஹரி இயக்கிய பூஜை, சிங்கம்-3, சாமி சாமி ஸ்கொயர் உள்ளிட்ட படங்கள் எதிர்ப்பார்த்த அளவில் பெரிதாக பேசப்படாத நிலையில், வழக்கமாக ஹரி படத்திற்கு இருக்கும் பெரும் எதிர்ப்பார்ப்பு யானை படத்திற்கு இல்லை என்றே சொல்லலாம்.

இப்படம் மே-6ம் தேதியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விநோயகஸ்தர்களின் கோரிக்கையின் அடிப்படையில் ஜூன் 17ம் தேதி வெளியாகும் என மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஜூன் 3ம் தேதி வெளியான லோகி-கமலின் விக்ரம் படம் இரண்டாவது வாரமும் திரையரங்கில் சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் நிலையில் யானை படத்தின் வெளியீடு ஜூலை 1ம் தேதி தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் படத்தின் மீது இருக்கும் மரியாதையின் காரணமாக படம் தள்ளி வைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. வசூலை வாரிக்கொடுக்கும் விக்ரம் படத்தை தூக்கிவிட்டு யானை படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மறுத்ததின் காரணமாகவே படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டிருப்பதாக சினிமா ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

இது ஒருபக்கமிருக்க வரும் ஜூன் 17ம் தேதி ஆர்.ஜே. பாலாஜியின் ‘வீட்ல விசேஷம்’ படம் 300க்கும் மேற்பட்ட திரையரங்கில் வெளியாக இருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜியின் கடந்த படங்களுக்கு ஆடியன்ஸின் மத்தியில் கணிசமான வரவேற்பு இருந்த நிலையில் அந்த படத்தின் வெளியீட்டாலும் யானை படம் தள்ளிப்போனது என்றும் கூறப்படுகிறது. ஒருகாலத்தில் பல ப்ளாக் பஸ்டர் கமர்ஷியல் ஹிட்களை கொடுத்த ஹரியின் சமீப கால சறுக்கல்களால் அவருக்கான மார்கெட் குறைந்ததாக பார்க்கப்பட்டாலும் யானை படத்தில் குதிரைப்போல் மீண்டெழுந்து ரசிகர்களை மீண்டும் மிரட்டியெடுப்பார் என்று சினிமா ஆர்வலர்கள் கூறிவருகின்றனர்.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.