விவேகானந்தர் மீன் சாப்பிட்டாரா..? சர்ச்சையை கிளப்பிய இஸ்கான் துறவிக்கு தடை!

சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது குரு ராமகிருஷ்ணா பரமஹன்சாவை விமர்சித்து பெரும் சர்ச்சையை கிளப்பிய துறவி அமோக லீலா தாஸை கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கம் என கூறப்படும் இஸ்கான் தடை செய்துள்ளது. துறவி…

சுவாமி விவேகானந்தர் மற்றும் அவரது குரு ராமகிருஷ்ணா பரமஹன்சாவை விமர்சித்து பெரும் சர்ச்சையை கிளப்பிய துறவி அமோக லீலா தாஸை கிருஷ்ணா உணர்வுக்கான சர்வதேச சங்கம் என கூறப்படும் இஸ்கான் தடை செய்துள்ளது.

துறவி அமோக் லீலா தாஸ் சொற்பொழிவு ஒன்றில் உரையாற்றிய போது, சுவாமி விவேகானந்தர் மீன் சாப்பிட்டதாக விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் ஒரு நல்லொழுக்கமுள்ள மனிதனால் எந்த ஒரு உயிரினத்திற்கும் தீங்கு விளைவிக்க முடியாது என்று கூறினார். இதுமட்டுமின்றி சுவாமி விவேகானந்தரின் ஆசிரியரான ராமகிருஷ்ணா பரமஹன்சாவின் “ஜாதோ மத் ததோ பாதை” அதாவது “பல கருத்துக்கள், பல பாதைகள் என்ற போதனையைப் பற்றி தாஸ் கிண்டலான கருத்துக்களையும் கூறி, அவரின் ஒவ்வொரு பாதையும் ஒரே இலக்கை நோக்கிச் செல்வதில்லை என்றும் விமர்சித்தார். துறவி அமோக லீலா தாஸின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, புயலை கிளப்பியது. மேலும் அவரின் கருத்துக்கு கடுமையான எதிர்வினைகளையும் கிளப்பியது.

”அவரது முற்றிலும் பொருத்தமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத கருத்துக்கள் மற்றும் இந்த இரு ஆளுமைகளின் சிறந்த போதனைகள் பற்றிய புரிதல் இல்லாமல் எங்களது துறவியை இப்படி பேசியுள்ளதை நினைத்து நாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளோம் என இஸ்கான் தெரிவித்தது.

https://twitter.com/pooja_news/status/1678705731124740096?s=20

இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் குணால் கோஷ், “நாங்கள் இஸ்கானை மதிக்கிறோம். ஆனால் அவர்கள் இப்போது அவரைத் தடுக்க வேண்டும். ராமகிருஷ்ணரையும் விவேகானந்தரையும் அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது. துறவி என்று அழைக்கப்படும் இவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.

துறவி அமோக் லீலா தாஸ் யார்?

அமோக் லீலா தாஸ் ஒரு ஆன்மீக பேச்சாளர் மற்றும் அவரது ஊக்கமூட்டும் பேச்சுகளுக்காக சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமானவர். இவரின் பேச்சுக்கு பல்லாயிரக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிக கவனத்தையும் பெறுகின்றன. இவர் தற்போது இஸ்கானின் துவாரகா பிரிவின் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார். 43 வயதான தாஸ் லக்னோவில் ஒரு பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதில் இருந்தே மிகவும் மதப்பற்றுள்ள அவர், பள்ளியில் படிக்கும்போதே பகவத் கீதையின் வசனங்களைப் படித்தார்.

பகவத் கீதையின் தத்துவம் மற்றும் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அமோக் லீலா தாஸ், அதை பற்றி மேலும் அறிய முடிவு செய்த அவர், அந்த சமயம் தனது பெயரை அமோக் லீலா தாஸ் என மாற்றிக்கொண்டார். தற்போது டெல்லியில் வசித்து வரும் இவர், ஆஷிஷ் அரோரா என்ற இயற்பெயருடைய இவர் அடிப்படையில் ஒரு மென்பொறியாளர். மென்பொறியாளராக பட்டம் பெற்ற பிறகு, சில காலம் மென்பொருள் துறையில் பணிபுரிந்தார். ஆனால் விரைவில் முழுநேர வேலையை விட்டுவிட்டு ஆன்மீகப் பாதையில் பயணித்தார். இதற்கு பிறகு ஆன்மிகப் பயிற்சிக்காக இஸ்கானின் துவாரகா மையத்திற்குச் சென்று பிரம்மச்சரிய சபதம் எடுத்தார்.

இஸ்கான் அறிக்கை;

https://twitter.com/neha_999/status/1678791103800307713?s=20

இந்த நிலையில், இஸ்கான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தாஸ் வெளிப்படுத்திய கருத்துக்கள் இஸ்கானின் மதிப்புகள் மற்றும் போதனைகளின் பிரதிநிதித்துவம் அல்ல. பிற மத நம்பிக்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு எந்த விதமான அவமரியாதை மற்றும் சகிப்பின்மை ஆகியவற்றை நாங்கள் கண்டிக்கிறோம். இழிவான கருத்துகள் ஆன்மீக பாதைகளின் பன்முகத்தன்மை மற்றும் தனிப்பட்ட தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வு தாஸிடம் இல்லாததைக் காட்டுகிறது. அவர் செய்த இந்த கடுமையான தவறை கவனத்தில் கொண்டு, இஸ்கான் அவரை 1 மாதம் தடை செய்ய முடிவு செய்துள்ளது. நாங்கள் எங்கள் முடிவை அவரிடம் தெரிவித்துள்ளோம். அமோக லீலா தாஸ் தனது கருத்துக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் அவர் எவ்வளவு பெரிய தவறை செய்துள்ளார் என்பதை அவர் உணர்ந்துள்ளார்.

மேலும் அவர் கோவர்தன் மலையில் 1 மாதம் தன் தவறுக்காக பிரயாச்சித்தம் அதாவது பரிகாரம் செய்ய சபதம் எடுத்துள்ளார். உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொது வாழ்க்கையில் இருந்து தன்னை முழுமையாக ஒதுக்கிக்கொள்வார்.

இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.