நியாய விலை கடையைக் கண்டித்து மண்ணெண்ணெய் கேன்களுடன் பெண்கள் மறியல்!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் தொடர்ந்து முறையாக பொருட்கள் வழங்காமல் சாக்குபோக்கு சொல்லி வந்த நியாய விலை கடையை கண்டித்து பொதுமக்கள் காலிகேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட…

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சியில் தொடர்ந்து முறையாக பொருட்கள் வழங்காமல் சாக்குபோக்கு சொல்லி வந்த நியாய விலை கடையை கண்டித்து பொதுமக்கள் காலிகேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரேசன் கடை எண்- 1 உள்ளது. இக்கடையின் கீழ் சுமார் 921 குடும்ப அட்டைகள் உள்ளன.இந்த நியாய விலை கடையானது கூட்டுறவு தொடக்க வேளான்மைத் துறை சங்கத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இக்கடையின் கீழ் உள்ள குடும்ப அட்டை தாரர்களுக்கு வட்ட வழங்கல் துறையின் கீழ் அரசு வழங்கும் உணவுப்பொருட்களான அரிசி, கோதுமை மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இக்கடையின் கீழுள்ள பயனாளர்களுக்கு முறையாக உணவுப்பொருட்கள் வழங்கப்படவில்லை என குற்றசாட்டு எழுந்துள்ளது.

மேலும் 500 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டிய இடத்தில் வெறும் 70 லிட்டர் மட்டுமே வழங்கப்படுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.இந்நிலையில் அதேபோன்றே குறைந்த அளவே மண்ணெண்ணெய் வந்துள்ளதால் சில பயனாளர்களுக்கு மட்டுமே வழங்க முடியும் கடை ஊழியர்கள் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக் கேன்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் பாலக்கோடு-பெல்ரம்பட்டி சாலையில் போக்குவரத்து நெரிசல்  ஏற்பட்டது. போராட்டம் குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஒரிரு நாட்களுக்குள்
நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தெரிவித்ததால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.இப்போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

—–வேந்தன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.