தருமபுரியில் தேர் விபத்து நடந்த மாதேஹள்ளி கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே .பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில் ஶ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளான நேற்று தேர் ஊர்வலம் நடைபெற்றது. அப்பொழுது வயல்வெளிகளில் தேர் வந்து கொண்டிருக்கும் போது திடீரென தேர் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் மழமழவென சாய்ந்தது விபத்துக்குள்ளனாது. இந்த விபத்தில் அப்பகுதியை சேர்ந்த சரவணன், மனோகரன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் விபத்து நடந்த தேரை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு கொண்டார். வரும் காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்று பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார்.
அன்புமணி ராமதாஸ் இரங்கல்
தருமபுரி தேர்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தருமபுரி மாவட்ட தேர் திருவிழாவின் போது ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர் என்பதையறிந்து வேதனையடைந்தேன்.
தேர் திருவிழாவில் பங்கேற்க வந்த இருவர் தங்களின் இன்னுயிரை இழந்திருப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேர் விபத்தில் உயிரிழந்த இருவரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் வீதமும் நிதியுதவி வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.








