தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘வாத்தி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் நடைபெற இருக்கிறது.
திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்களுக்குப் பிறகு தனுஷ் தற்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் சார் என்ற பெயரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். முக்கிய கதாப்பாத்திரங்களில் சமுத்திரகனி நடித்துள்ளார்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் நடைபெற இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக இந்த இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கெனவே ‘வாத்தி’ திரைப்படத்தின் ’நாடோடி மன்னன்…’, ’வா வாத்தி…’ என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. வா வாத்தி பாடல் யூடியுபில் 33 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.







