பிரபல ஹாலிவுட் இரட்டை இயக்குனர்களான ஆன்டனி ரூசோ மற்றும் ஜோ ரூசோ, தி கிரே மேன் திரைப்படத்திற்காக ஜுலை 22 ஆம் தேதி இந்தியா வர உள்ளனர்.
ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ள தி கிரே மேன் திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படத்தில் ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்களுடன் இணைந்து தனுஷ் நடித்துள்ளார்.
இந்த நிலையில் பிரபல ஹாலிவுட் இரட்டை இயக்குனர்களான ஆன்டனி மற்றும் ஜோ ரூசோ, தி கிரே மேன் திரைப்படத்திற்காக இந்தியா வர உள்ளனர். இந்தியாவில் உள்ள ரசிகர்களை இயக்குனர்கள் ரூசோ பிரதர்ஸ் சந்திக்க உள்ளனர். ஆம் நீங்கள் படித்தது உண்மைதான். இந்தியாவில் நடைபெறும் தி கிரே மேன் பிரீமியரில் ரசிகர்களை சந்திக்க இயக்குனர் இருவரும் விரைவில் மும்பையில் நடிகர் தனுஷுடன் இணைய உள்ளனர்.
இது தொடர்பாக நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பேசிய ருஸ்ஸோ சகோதரர்கள் எங்களின் புதிய படமான தி கிரே மேன் படத்திற்காக எங்கள் அன்பு நண்பர் தனுஷைப் பார்க்க இந்தியா வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். தயாராகுங்கள் இந்தியா, விரைவில் சந்திப்போம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஜூலை 22 அன்று மும்பையில் நடைபெறும் தி கிரே மேன் பிரீமியரில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரூசோ பிரதர்ஸ் ரசிகர்களை சந்தித்து பேச உள்ளனர். நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தற்போது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
– தினேஷ் உதய்







