தேனி மாவட்டம், குச்சனூர் சோனை கருப்பசாமிக்கு மதுபானம் படையல் வைக்கப்பட்டது. 2000 மது பாட்டில்கள் படைத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். மேலும், 25 ஆடுகள், 40 கோழிகளின் கறிவிருந்துக்காக வழங்கப்பட்டது.
பிரசித்திபெற்ற தேனி குச்சனூர் அருள்மிகு சுயம்பு சனீஸ்வரர் திருக்கோவில் ஆடி
மாத திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
இதனைத் தொடர்ந்து வாராந்திர திருவிழாவாக சனிக்கிழமைகளில் திருக்கல்யாணம், சக்தி கரகம் எடுத்தல், மஞ்சனக்காப்பு சாத்துப்படி செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
இன்று சோனை கருப்பண்ணசாமிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு கருப்பண்ணசாமிக்கு நேர்த்திக் கடனாக வழங்கிய 2000ற்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் சுவாமி சன்னதியில் படையல் வைக்கப்பட்டன.
மதுபானம் முழுவதும் மண்கலயத்தில் ஊற்றப்பட்டது. காணிக்கையாக வழங்கிய 25 ஆடுகள், 40 கோழிகளின் கறிவிருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்தகொண்டனர்.








