இயக்குநர் பாக்யராஜ் மறைவு – எடப்பாடி பழனிசாமி இரங்கல்…!

இயக்குநர் பாக்யராஜ் மறைவிற்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரபல திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத் திறமையாளராக விளங்கிய திரு. K பாக்யராஜ் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தவர் மறைந்த திரு. பாக்யராஜ் அவர்கள். “அண்ணா நீ என் தெய்வம்” என்ற புரட்சித் தலைவர் அவர்களின் முடிவுறாத படத்தின் காட்சிகளை வைத்து, அதற்கேற்ப ஒரு புதிய திரைக்கதை அமைத்து, “அவசர போலீஸ் 100” என்ற படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டார்.

மாண்புமிகு புரட்சித் தலைவர் அவர்களும் திரு. பாக்யராஜ் அவர்கள் மீது பேரன்பு கொண்டிருந்தார்.

இந்திய திரையுலகின் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவர்தம் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பதாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.