சிவாஜி கணேசனுக்கு வழங்கப்பட்ட செவாலியர் விருது தனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக அருணா சாய்ராம் தெரிவித்துள்ளார்.
கர்நாடக இசை உலகின் ராக் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் அருணா சாய்ராம். இவர் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் கோலோச்சுபவர். இவரின் சாதனைகளுக்காக பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். மியூசிக் அகாடெமி சார்பில் சங்கீத கலாநிதி விருதையும், தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் அமெரிக்க காங்கிரஸின் “உயர் சிறப்பு விருதை” பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற விழாவில் அருணா சாய்ராமுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு முன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் செவாலியர் விருது பெற்றது அனைவருக்கும் தெரியும். அவர் பெற்ற விருதை பெற்றது தமக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என அருணா சாய்ராம் தெரிவித்தார். மும்பையில் சிறு வயது முதல் சிவாஜி கணேசன் நடித்த படங்களை திரையரங்குகளில் பேரார்வத்துடன் பார்த்து ரசித்ததையும் அவர் நினைவு கூர்ந்தார். தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்களுக்கு நன்றியையும் அருணா சாய்ராம் தெரிவித்து கொண்டார்.





