விழுப்புரம் கள்ளச் சாராய விவகாரத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடு விதித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் ஈ டி எஸ் கொசு புழுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் குறித்தும் கொசு உற்பத்திகளை தடுக்கும் விதங்கள் குறிக்கும் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஆகியோர் பங்கேற்றனர்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்ததாவது..
“ தமிழ்நாட்டில் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் தேசிய டெங்கு தடுப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் ஒன்றுபடுவோம் டெங்குவை தடுப்போம் என்ற முழக்கத்துடன் தமிழக அரசு தொடர்ந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைக்காக பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு குறைவாகவே இருக்கிறது.
இதுவரை 80 ஆயிரத்து 950 முகாம்கள் நடத்தப்பட்டு 30 லட்சத்து 94 ஆயிரத்து 94 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். 14,312 பேருக்கும் காய்ச்சல் கண்டறியப்பட்டு குணமடைந்து நலமுடன் உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் தற்காலிக பணியாளர்கள் ஏறக்குறைய 22 ஆயிரம் பேர் வீடு வீடாகச் சென்று கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அளிக்கும் பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து கொசு உற்பத்தி தடுக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க தேவையான ரத்த அணுக்கள், பரிசோதனை கருவிகள், மருந்துகள், ரத்தக்கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. எலிசா முறையில் டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்க பரிசோதனை மையங்கள் 125ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கபட்டு 66 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 13 இறந்துள்ளனர். விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு சிறந்த மருத்துவ அலுவலர்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முண்டியம்பாக்கம் அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட உள்ளேன்.
நோயாளிகளுக்கு தேவையான மருத்துவக் கட்டுப்பாடு வசதிகள் ஆய்வு செய்து அவர்களுக்கு அங்கேயே ஏற்படுத்தி தரப்படும் அவர்களது உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கு தங்கும் வசதி உள்ளிட்டவர்களும் நேரில் சென்று ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் ”மெத்தனால் ” வேதிப்போருளின் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும். அதேபோல மெத்தனால் வேதிப்பொருளை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.







