அரியலூரில் அருகே 12 லட்சம் ரூபாய் மதிப்பிலான குக்கர்களை அமமுகவினரிடம் இருந்து பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அரியலூர் மாவட்டம் வாரணவாசி சமத்துவபுரம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது முதலில் வந்த லாரி ஓட்டுநர், வெறும் காலிப்பெட்டிகள்தான் இருக்கின்றன என்று கூறி லாரியை எடுத்துச் சென்றார். பின்னர் வந்த மற்றொரு லாரியை மடக்கி சோதனை செய்தபோது அதில் குக்கர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், தஞ்சை மாவட்ட அமமுகவின் ஜெயலலிதா பிறந்த நாள் விழா என குறிப்பிட்டு ஜெயலலிதா மற்றும் டிடிவி தினகரன் படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பறக்கும்படையினர் திருமானூர் கொள்ளிடம் பாலம் சோதனை சாவடிக்கு தொடர்பு கொண்டு முதலில் சென்ற லாரியை பறிமுதல் செய்ய உத்திரவிட்டனர். அதன்பேரில் 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு அரியலூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்க்கு கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்







