தொடர் மழை எதிரொலியாக அமைச்சர்கள் சென்னையிலேயே இருந்து பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு நாட்களாக வட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேடை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக அந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க உள்ளனர். இந்த நிலையில், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் ஆகியோர் திருவாரூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
தொடர் மழை எதிரொலியால் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை சென்னையிலேயே இருந்து பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நேற்றே திருவாரூர் செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் அமைச்சர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.







