முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை – செங்கோட்டையன் பங்கேற்பு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள திஷா கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமை செயலகத்திற்கு வருகை தந்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் ( DISHA committee ) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது.

மத்திய அரசின் திட்டங்கள் மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதை கண்காணிக்க, மத்திய அரசு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற முதலமைச்சரை தலைவராகக் கொண்டு இந்த குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு அரசு துறையின் செயலாளர் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், சுப்பராயன், சு. வெங்கடேசன், டி.ஆர்.பாலு, மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, துரை வைகோ, தம்பிதுரை, அன்புமணி ராமதாஸ், ஜி.கே.வாசன், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், எழிலன், நீலமேகம், பூமிநாதன், அசன் மௌலானா, செங்கோட்டையன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதைதவிர துறை சார்ந்த செயலாளர், அரசு சாரா தொண்டு நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்க தலைமை செயலாளர் முருகானந்தன், அமைச்சர் இ. பெரியசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, சுப்புராயன், மாணிக்கம் தாகூர், துரை வைகோ, திருமாவளவன், நவாஸ் கனி வருகை மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.