முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் செய்திகள்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் எப்படி நடைபெறும்?…வாக்காளர்கள் யார்?…


எஸ்.இலட்சுமணன்

கட்டுரையாளர்

அகில இந்தியா காங்கிரஸ் தலைவர் தேர்தல் 22 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வாக்குப்பெட்டிக்கு வேலை கொடுக்கப்போகிறது. இந்த தேர்தலில் போட்டியிடபோவதில்லை என ராகுல்காந்தி ஒதுங்கிவிட்ட நிலையில் தற்போதைய நிலவரப்படி இருவர் வேட்பாளர்களாக களம் இறங்குவது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக்கெலாட்டும், காங்கிரஸ் எம்.பி சசிதரூரும் பலப்பரிட்சை நடத்த உள்ளதால் அக்டோபர் 17ந்தேதி அவசியம் வாக்கெடுப்பு நடைபெறும் என்றே தகவல்கள் கூறுகின்றன.  இந்த சூழலில் நாட்டின் மிகப்பழமையான கட்சியான இந்திய தேசிய காங்கிரசில் தலைவர் தேர்தல் எப்படி நடக்கிறது என்பதை விரிவாக பார்ப்போம்.

காங்கிரஸ் கட்சியின் சட்டவிதிகள் சாசனத்தின் 18வது அட்டவணை தலைவர் தேர்தல் குறித்து விரிவாக விளக்குகிறது. அந்த சட்டவிதிகளின்படி பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள்தான் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவரை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள். 28 மாநிலங்கள், மற்றும் 9 யூனியன் பிரதேசங்களின் பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுளனர். அந்த வகையில் தற்போது இந்த வாக்காளர் பட்டியலில் சுமார் 9 ஆயிரம் பேர் உள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த 9 ஆயிரம் பேரில் 10 பேரால் ஒருவர் முன்மொழியப்பட்டால் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடலாம். இ்ப்படி முக்கியத்துவம் வாய்ந்த பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் பதவிக்கு 6 விதங்களில் காங்கிரஸ் கட்சியினர் வருகின்றனர். மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், பிளாக் கமிட்டிகள் மூலம் நடத்தப்படும் மறைமுக தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்களாக அந்தந்த மாநிலங்களில் உள்ளவர்கள், சட்டமன்ற கட்சி உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழுவில் சிறப்பு வகையினராக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆகியோர் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிட்டால் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகங்களில் வாக்குப்பதிவு நடைபெறும். இரண்டு பேர் மட்டும் போட்டியில் இருந்தால் இருவரில் ஒருவர் பெயரை தேர்ந்தெடுத்து அதனை வாக்குச்சீட்டில் தெரிவித்து வாக்குபெட்டியில் போட்டுவிடலாம்.

இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடும் பட்சத்தில் வாக்காளர்கள் ஒன்று, இரண்டு, மூன்று என தங்களின் விருப்ப முன்னுரிமையை பதிவுசெய்து வாக்களிக்க வேண்டும்.

குறைந்தது 2 விருப்ப முன்னுரிமைகளை குறிப்பிடாத வாக்குகள் செல்லாததாகக் கருதப்படும். வாக்குப்பெட்டிகள் பின்னர் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு வாக்குகள் எண்ணப்படும். அதிக வாக்குகளை பெற்றவர் அகில இந்திய காங்ககிரஸ் கமிட்டியின் தலைவராக அறிவிக்கப்படுவார்.

கடைசியாக 2000ம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்காளர் பட்டியலை பொதுவெளியில் வெளியிடாதது எவ்வாறு சர்ச்சையை ஏற்படுத்தியதோ அதே போன்ற சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து முதன் முதலில் குரல் எழுப்பினார் ஜி23 தலைவர்களில் ஒருவரான ஆனந்த் சர்மா. அதே குழுவில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் மணிஷ் திவாரி வாக்களர் பட்டியல் விவகாரத்தில் காங்கிரஸ் தலைமைக்கு பல்வேறு காட்டமான கேள்விகளை எழுப்பினார். வாக்காளர் பட்டியலை பொதுவெளியில் வெளியிடாமல் தலைவர் தேர்தலை எப்படி சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்த முடியும் என அவர் எழுப்பிய கேள்வி காங்கிரசில் சலசலப்பை ஏற்படுத்தியது.  மணிஷ்திவாரியின் இந்த கேள்விக்கு வலுசேர்க்கும் விதமாக கார்த்தி சிதம்பரம், சசி தரூர் ஆகியோரும் டிவிட்டர் பதவிகளை வெளியிட்டனர். அவர்களையடுத்து வாக்காளர் பட்டியலை வெளியிட காங்கிரஸ் தலைமையை அசாம் எம்.பி. பிரத்யும் போர்டோலோயும் வலியுறுத்தியுள்ளார்.

ஆனாலும் இந்த கோரிக்கைகளுக்கு அசைந்துகொடுக்காத காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு தலைவர் மதுசூதனன் மிஸ்ட்ரி, இது பொதுமக்கள் பங்கேற்கு தேர்தல் அல்ல, வாக்காளர் பட்டியலை பொதுவெளியில் வெளியிடுவதற்கு என விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகங்களுக்குச் சென்று பட்டியலை பெற்றுக்கொள்ளலாம் என அவர் அளித்த விளக்கம் மணிஷ் திவாரி போன்றோரை இன்னும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. 28 மாநிலங்கள், 9 யூனியன் பிரதேசங்களின் தலைமை அலுவலகங்களுக்கு  சென்று வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொள்வது எப்படி சாத்தியமாகுமா என இன்னும் பகிரங்கமான தனது அதிருப்தியை டிவிட்டரில் வெளிப்படுத்தினார் மணிஷ்திவாரி. இப்படி ஒருபுறம் சர்ச்சைகள் இருந்தாலும் இந்தியாவில் தலைவர் தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடத்திய, நடத்தும் ஒரே கட்சி காங்கிரஸ் என முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறுவதுபோல் மார்தட்டிக்கொள்கின்றனர் காங்கிரசார்.

சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியில் அகில இந்திய தலைவர் தேர்தல் மிக அரிதாகத்தான் வாக்கெடுப்புவரை சென்றிருக்கிறது. பெரும்பாலும் போட்டியின்றி  ஒருமனதாகவே தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். கடந்த 50 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வாக்கெடுப்பு நடந்திருக்கிறது. 1997ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த சீதாராம் கேசரி மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டபோது, அவரை எதிர்த்து இரண்டு ஜாம்பவான்கள் களம் இறங்கினர்.

ஒருவர் சரத் பவார் மற்றொருவர் ராஜேஷ் பைலட். ஆனால் 6,224 வாக்குகள் பெற்று  மீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சீதாராம் கேசரி. சரத்பவார் 888 வாக்குகளையும், ராஜேஸ் பைலட் 354 வாக்குகளையும் பெற்றனர்.

2000ம் ஆண்டு காங்கிரஸ் தேர்தலில் சோனியா காந்தி களம் இறங்கியபோது அவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீர் திருப்பமாக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி ஜிதேந்திர பிரசாதா களம் இறங்கினார். ஆனால் நேரு குடும்பத்திற்கு காங்கிரஸ் கட்சியில் இருக்கும் செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் பிரம்மாண்ட வெற்றி பெற்றார் சோனை. அவர் 7,448 வாக்குகள் பெற்ற நிலையில் ஜிதேந்திர பிரசாதாவிற்கு 94 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான அறிவிக்கையை நேற்று அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு வெளியிட்டுள்ளது. அதன்படி நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வரும் 30ந்தேதி வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். அக்டோபர் 1ந்தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்புமனுவை திரும்ப பெற அக்டோபர் 8ந்தேதி கடைசி நாள் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்டோர் களத்தில் இருக்கும் பட்சத்தில் அக்டோபர் 17ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று அக்டோபர் 19ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலை நடத்தும் அலுவலரும் அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு தலைவருமான மதுசூதனன் மிஸ்ட்ரி அறிவித்துள்ளார். 22 ஆண்டுகளுக்கு பின்பு வாக்கெடுப்போடு நடைபெற உள்ளதாக கருதப்படும் காங்கிரஸ் தலைவர் நாடு முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவ நினைவு நாள்: போலீஸார் குவிப்பு

Halley Karthik

திருவொற்றியூர்: நிவாரணத் தொகையை வழங்கினார் அமைச்சர்

Halley Karthik

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறைக்கு 33 புதிய அறிவிப்புகள்

EZHILARASAN D