நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19-ம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதற்கான தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை உள்ளிட்ட பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன.
திமுக தலைமையிலான மதச்சார்ப்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடன் நடந்த பேச்சு வார்த்தை நேற்று நிறைவு பெற்றது. இதில், காங்கிரஸ் கட்சிக்கு 8 சதவீத இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் 16 இடங்கள் காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இதில், 9 இடங்களில் பெண் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.







