கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு, வரும் 4ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகளை தொடங்க கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதால் கல்லூரிகளை திறக்க வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன.தொற்று பரவல் குறைந்ததை அடுத்து, கல்லூரிகள் செப்டம்பர் ஒன்றாம் தேதி திறக்கப்பட்டன. தற்போது இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், அனைத்து வகை கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கை நிறைவடைந்துவிட்டதாக கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. வருகிற 4ஆம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகளை துவக்க வேண்டும் என்றும், மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.







