கோவையில் 10 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீர்த்தனா, சிரித்தபடியே பதிலளித்ததாகக் கூறி சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் அவர் மீது பலர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த சுழலில் அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது ;
தொழில்துறை தொடர்பான அறிமுகக் கூட்டத்தை முடித்து பத்திரிகையாளர்களை சந்தித்து வெளியே வந்தபோது, கேள்வி-பதில்கள் முடிந்த தருணத்தில் இயல்பாக நான் சிரித்தேன். அது எந்தக் கேள்விக்கும் அல்லது சம்பவத்திற்கும் எதிரான பிரதிபலிப்பல்ல. ஆனால் அந்த உடல் மொழியை தவறாகப் புரிந்து கொண்டு, அரசியல் நோக்கில் திரித்து பரப்பப்படுவது வருத்தமளிக்கிறது.
10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த இந்த கொடுஞ்செயல் மிகுந்த வேதனை அளிக்கிறது. அந்த சம்பவத்தில், மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 250க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதியளித்துள்ளது. ஒரு குழந்தைக்கான நீதியும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பும் தான் இந்த அரசின் முதல் முன்னுரிமை.
இத்தகைய உணர்வுப்பூர்வமான சூழ்நிலையிலும் அடிப்படையற்ற விமர்சனங்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தேவையற்ற ட்ரோலிங் நடைபெறுவது கவலைக்குரியது. எதிர்க்கட்சியை விமர்சிப்பது ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்; ஆனால் உண்மைகளை திரித்து, ஒருவரின் தனிப்பட்ட தருணங்களையே அரசியல் ஆயுதமாக மாற்றுவது சமூகத்திற்கு ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.
தமிழ்நாடு அரசு மக்கள் பாதுகாப்பிலும், நீதியிலும் எந்த சமரசமும் செய்யாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







