ஆரணியில் தம்பதி சாப்பிட்ட பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். ஆரணி 5 ஸ்டார் உணவகத்தில் தொடர்ந்து தரமற்ற பிரியாணிகள் வழங்குவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் மணிகுண்டு அருகே இயங்கி வரும் 5 ஸ்டார்
உணவகத்தில் நேற்று நேத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி மற்றும்
அவருடைய மனைவி ஜான்சி ராணி ஆகியோர் பிரியாணி சாப்பிட கடைக்கு வந்துள்ளனர்.
அப்போது, அவர்கள் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மீன் உள்ளிட்ட அசைவ உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளனர். அப்போது, மூர்த்தி சாப்பிட்ட பிரியாணியில் இறந்துகிடந்த கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து கடையின் மேலாளர் இடம் கேட்டதற்கு சரியான பதில் அளிக்காததால்
மூர்த்தி ஆர்டர் செய்த உணவுகளுக்கு பில் பேமெண்ட் செய்துவிட்டு இதுகுறித்து
ஆரணி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்குப் புகார் தெரிவித்தார். ஆனால், இதுவரை ஆரணியில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
தொடரும் அவலம்….
கடந்த மே மாதம் இதே ஆரணி 5 ஸ்டார் பிரியாணி சென்டரில் பிளஸ் 2 மாணவன்
திருமுருகன் தந்தூரி பிரியாணி வகை உண்டு புட் பாய்ஷன் ஆகி இறந்த சம்பவம்
அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். ஆரணி 5 ஸ்டார் உணவகத்தில் தரமற்ற உணவுகளை வழங்கி வரும் இந்த உணவகத்தின் மீது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்ற சந்தேகம் மக்கள் மனதில் ஒரு கேள்வியாக எழுந்து வருகிறது. தொடர்ந்து தரமற்ற உணவுகளை வழங்கி வரும் ஆரணி 5 ஸ்டார் பிரியாணி கடை மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ம.பவித்ரா







