காதல், ஆக்ஷன், டிராமா, காமெடி, ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் என பல வகையான ஜானர்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து விருந்து வைத்தவர் நடிகர் சியான் விக்ரம். 2000த்தின் தொடக்கம் முதல் திரையில் இவர் செய்த சாகசங்களின் தாக்கத்தால் மற்ற முன்னணி நடிகர்களுமே கூட நீளமாக முடி வளர்ப்பது, உடலை வருத்தி நடிப்பது என புதுப்புது அவதாரங்களை எடுக்க தொடங்கினர். சேது, காசி, தூள், தில், சாமி, கிங், ஜெமினி, அந்நியன் என தொடர்வெற்றிகளை கொடுத்து உச்சநட்சத்திரமாக உருவெடுத்து தனக்கென தனிப்பெரும் ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இதனையடுத்து அடுத்தடுத்து தொடர் தோல்விகளை அவர் சந்திக்க நேர்ந்தது. விக்ரமுக்கு கடைசியாக வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மெகா ஹிட் கொடுத்த படம் தெயத்திருமகள் தான். அதன் பிறகு வெளிவந்த ராஜபாட்டை, தாண்டவம், டேவிட், 10 என்றதுக்குள்ள, இருமுகன், ஸ்கெட்ச், சாமி square, கடாரம் கொண்டான், மஹான் என கடந்த 10 வருடங்களாக வந்த படங்களை அனைத்துமே தோல்விப் படம் அல்லது சுமார் ரகம் தான்.இத்தனையும் கடந்த அவருக்கான ரசிகர்கள் அப்படியேதான் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே அவருக்கான சிறப்பாக பார்க்கப்படுகிறது
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு ப்ளாக் பஸ்டர் தியேட்டரிக்கல் ஹிட் கொடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் சியான் விகரன். இப்படியொரு சூழலில் அவர் கையில் எடுத்திருக்கும் படம் தான் கோப்ரா.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்துவுடன் இணைந்து விகரம் செய்யும் சம்பவம் தான் கோப்ரா. இப்படத்தில் நாயகியாக கேஜிஎஃப் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இர்பான் பதாந், கே.எஸ்.ரவிகுமார், மியா ஜார்ஜ், மிருணாளினி ரவி, மீனாட்சி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிடுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள இப்படம் விக்ரம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் விருந்து வைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரஹ்மானின் கடந்த சில ஆல்பங்களுமே சுமார் ரகமாக பார்க்கப்பட்ட நிலையில் கோப்ராவுக்காக அவர் இசையமைத்த ஆதிரா பாடல் இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இதற்கிடையே விக்ரமுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஒரு பக்கம் அவருக்கு மாரடைப்பு என்ற வதந்திகள் பரவ இன்னொரு பக்கம் அவரின் ரசிகர்களோ அவருக்காக தங்களின் அன்பையும் பிரார்தானைகளையும் மேற்கொண்டனர்.
இந்நிலையில் உடல்நலம் குணமாகி நேற்று நடைபெற்ற கோப்ரா இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் விக்ரம். கமலின் விக்ரம் பட bgm -ஐ போட்டு நடிகர் விக்ரமின் வீடியோக்களை எடிட் செய்து இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கினர். விழாவில் பேசிய விக்ரம், ‘என் குடும்பத்தினர், நண்பர்கள் குறிப்பாக என் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் இருக்கும் வரை எனக்கு ஒன்றுமே ஆகாது, சினிமாதான் என் உயிர்.. சினிமாவுக்காகவே வாழ்வேன்’ என்று நெஞ்சம் உருகினார்.
இதனைத்தொடர்ந்து அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் இணையத்திலும் வெளியிடப்பட்டு ட்ரெண்ட் ஆகி வருகிறது.







