“கூட்டணி வரும் போகும்… ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது” – #EPS பேச்சு

கூட்டணி வரும், போகும் ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் அரங்கில், இன்று (டிச.15)…

"Coalitions come and go... but AIADMK's policy is constant" - #EPS speech

கூட்டணி வரும், போகும் ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது என அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் அரங்கில், இன்று (டிச.15) நடைபெற்றது. இக்கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் 2,523 பேரும், சிறப்பு அழைப்பாளர்கள் 1,000 பேரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேடையில் பேசியதாவது,

“நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுக மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. கூட்டணி சரியாக அமையவில்லை என கூறினார்கள். கூட்டணி வரும், போகும். ஆனால் அதிமுகவின் கொள்கை நிலையானது. தமிழ்நாட்டில் தனித்து நின்று ஆட்சியை அமைத்த ஒரே கட்சி அதிமுக தான். கடந்த 2021ம் ஆண்டு 1.98 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் திமுக ஆட்சியில் அமர்ந்தது.

தமிழ்நாட்டில் நிதி நிலைமை படு பாதாளத்திற்கு சென்றுவிட்டது. இன்று விலைவாசி உயர்ந்துவிட்டது. திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. திமுக ஆட்சியில் 50க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரசு குழு அரசாகவே உள்ளது.

சட்டப்பேரவை நாட்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் பயம்தான். அதிமுகவை பார்த்து ஆளுங்கட்சிக்கு பயம் வந்துவிட்டது. சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை என்பார்கள். ஆனால் நான் பேசும்போது கட் செய்கிறார்கள். சட்டப்பேரவையில் நான் பேசியதை ஒளிபரப்பி இருந்தால் திமுக அரசே இருந்திருக்காது”

இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.