67 வருடங்களுக்கு முன் தான் வாழ்ந்த வீட்டை ஆவலாய் சுற்றிப் பார்த்திருக்கிறார் அமெரிக்கவிலிருந்து திரும்பிய மூதாட்டி ஒருவர். அதுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே அவருக்கு அந்த வீட்டை சுற்றிக் காண்பித்து, உபசரித்து அந்த மூதாட்டியை மகிழ்ச்சி பெருக்கில் ஆழ்த்தியிருக்கிறார். தமிழ்நாட்டின் அரசியல் அத்யாயங்கள் பலவற்றை எழுதிய, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தில்தான் நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு அரங்கேறியிருக்கிறது.
சென்னையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 63 ஆண்டுகளாக வசித்த கோபாலபுரம் இல்லம், தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு பெயர்.மறைந்த பிரதமர் இந்திரா காந்தி தொடங்கி தற்போதைய பிரதமர் நரேந்திரமோடி வரை எத்தனையோ தேசிய தலைவர்களும், மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் நகர்வுகளை தீர்மானித்த ஆலோசனைகள் நடைபெற்ற இடம் இந்த கோபாலபுரம் இல்லம்.
அந்த இல்லத்தை கருணாநிதி கடந்த 1955ம் ஆண்டு மார்ச் மாதம் சரபேஸ்வரர் என்பவரிடமிருந்து வாங்கினார். அப்போது அவரது பேத்தி சரோஜாவின் திருமண ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. தாம் வாழ்ந்த வீட்டிலேயே தனது பேத்தியின் திருமணம் நடைபெற வேண்டும் என்ற சரபேஸ்வரரின் விருப்பத்தை அறிந்த கருணாநிதி, கோபாலபுரம் இல்லம் தனக்கு சொந்தமான பிறகும் அந்த இல்லத்தில் சரபேஸ்வரர் தனது குடும்பத்தினருடன் இரண்டு மாதங்கள் தங்கியிருக்க அனுமதித்தார்.
இந்நிலையில் திருமணத்திற்கு பின் அமெரிக்கா சென்று செட்டிலான சரோஜா சீதாராமன் 67 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது சென்னை வந்துள்ளார். தனக்கு திருமணமான கோபாலபுரம் இல்லத்தை காண வேண்டும் என்கிற ஆவல் அவருக்கு ஏற்பட்டது. இதனை ஊடகங்கள் மூலம் அறிந்துகொண்ட முதலமைச்சர் மு.க,ஸ்டாலின், அவரை அவரது குடும்பத்தினருடன் கோபாலபுரம் இல்லத்திற்கு வரவழைத்தார். சரோஜா சீதாராமன் குடும்பத்தினரை கோபாலபுரம் இல்லத்தின் ஒவ்வொரு அறைக்கும் தானே நேரிடையாக அழைத்துச் சென்று சுற்றிக்காண்பித்தார். அவரது இந்த செயலும், உபசரிப்பும் சரோஜா சீதாராமனையும், அவரது குடும்பத்தினரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மிகுந்த நெகிழ்ச்சியோடு அவர்கள் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
இந்த நெகிழ்ச்சியூட்டும் நிகழ்வை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருணாநிதி திரைத்துறையில் வெளிப்படுத்திய எழுத்தாற்றலின் வெகுமதியே கோபாலபுரம் வீடு என்றும், இந்த வீடு, தங்கள் குடும்பத்துக்கு மட்டுமல்ல, இன்னொரு குடும்பத்துக்கும் உறவாகி இருந்தது என்றும் கூறியுள்ளார். அமெரிக்காவிலிருந்து திரும்பிய சரோஜா சீதாராமன், கோபாலபுரம் இல்லத்தை காண விரும்பியதை தாம் ஊடகங்கள் வழியே அறிந்து அவரது குடும்பத்தினரைக் கோபாலபுரம் வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இரு குடும்பங்களுக்கும் உறவான வீடு நட்புப் பாலமாய் உயர்ந்து நின்று தங்களை அன்போடு பார்த்தது என்றும் அந்த தருணங்களை நெகிழ்ச்சியோடு தமது டிவிட்டர் பதிவில் நினைவு கூர்ந்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ”வீடு என்பது பலரது கனவு! கனவு இல்லத்தைச் சம்பாதிக்கும்போது நாம் அடையும் மகிழ்ச்சி அளவிட முடியாதது! நம்மோடும் நம் குடும்பத்தோடும் உறவாகி, நம் அடையாளமாகவே வீடுகள் மாறிவிடுகின்றன. எங்கள் குடும்பத்தின் அடையாளம் கோபாலபுரம் வீடு!” என்றும் தமது டிவிட்டர் பதிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.




