முக்கியச் செய்திகள் தமிழகம்

தடுப்பூசி செலுத்திக்கொண்டதால்தான் கொரோனாவால் எனக்கு பெரிய பாதிப்பு ஏற்படவில்லை- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மக்களின் அன்பு மற்றும் மருத்துவர்களின் கனிவால் தாம் நலமுடன் பணிகளை தொடர்வதாகவும் நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த 14ந்தேதி சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 4 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர் நலமடைந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு மக்களுக்கும், திமுக தொண்டர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்:-

கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்ல செய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமைக் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல கட்சிகளின் தலைவர்களும் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு நலன் விசாரித்தனர். பொதுமக்கள், பல்வேறு அமைப்பினர் கடிதம் மூலமாக நலம் விசாரித்தனர். அந்தக் கடிதங்களை எல்லாம் தொடர்ந்து படித்து வருகிறேன். மருத்துவர்கள் அளித்த சிகிச்சையுடன் அந்தக் கடிதங்களும் உடலுக்கும் மனதுக்குத் தெம்பு தந்தது.

முதலமைச்சர் என்ற பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவே, மருத்துவ அறிவியல் மீது முழுமையான நம்பிக்கை வைத்து தடுப்பூசி போட்டுக் கொண்டேன் என்பதால் இந்தக் கொரோனா தொற்று பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இருமலும் சளியும் மட்டும் இருந்ததால், மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற வேண்டியதாயிற்று. நாளை (திங்கட்கிழமை) டிஸ்சார்ஜ் செய்து விடுவார்கள். இருப்பினும், ஒருவார காலத்திற்கு வீட்டில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

வீட்டில் இருக்க சம்மதித்தாலும், ஓய்வில் இருந்திட மனம் ஒப்பவில்லை. உங்களில் ஒருவனான என்னை நம்பி, தமிழ்நாட்டு மக்கள் அளித்துள்ள பெரும் பொறுப்பினை உணர்ந்து, முதலமைச்சர் என்ற முறையில் ஆற்ற வேண்டிய பணிகளை, கவனிக்க வேண்டிய கோப்புகளை, எடுக்க வேண்டிய முடிவுகளை, செயல்படுத்த வேண்டிய திட்டங்களை வீட்டில் இருந்தாலும் கவனித்தபடிதான் இருப்பேன்.

திங்கட்கிழமையன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறுவதால், அதற்கான ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்கு நேரில் சென்று வாக்களித்துவிட்டுத் திரும்ப வேண்டிய நிலையில் இருக்கிறேன். அதே நாளில் (சூலை 18) தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட இருக்கிறது.அந்த நாளினை, உங்களில் ஒருவனான எனது தலைமையிலான நமது அரசு, ‘தமிழ்நாடு நாள்’ என ஆண்டுதோறும் கொண்டாடத் தீர்மானித்திருப்பதால், சென்னை கலைவாணர் அரங்கில் ‘தமிழ்நாடு திருநாள்’ என்ற நிகழ்வு திங்கட்கிழமையன்று நடைபெறுகிறது. சென்னை மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட அந்த மகத்தான நாளுக்கான கொண்டாட்டத்தில் பங்கேற்கும் வகையில், வீட்டிலிருந்தபடியே காணொலியில் உரையாற்றிட இருக்கிறேன்.

தமிழ்நாடு என்ற பெயரால் மட்டுமல்ல, ‘திராவிட மாடல்’ ஆட்சியின் விளைவினாலும் நம் மாநிலத்திற்குப் பெருமைகளைச் சேர்த்து வருகிறோம். அதில் ஒரு பெருமையாகத்தான், 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகளை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இந்திய ஒன்றியத்தின் பிரதமர் நரேந்திர மோடி சூலை 28 அன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வினைத் தொடங்கி வைத்துச் சிறப்பிக்க இருக்கிறார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த உலகப்புகழ் பெற்ற செஸ் சாம்பியன்களும், இளம் வீரர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். அதற்கான ஆயத்தமும் ஆர்வமும் இப்போது வெளிப்படத் தொடங்கியிருப்பதைக் காண முடிகிறது.

‘வருக.. வருக.. தமிழ்நாட்டுக்கு வருக…’ என ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அமைந்த முன்னோட்டக் காணொலியைத் தொடர்ந்து, அதன் முழுப் பாடலும் அடங்கிய காணொலி விரைவில் வெளிவர இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்புமிக்க வாழ்த்துகளால் முழுமையான உடல்நலத்துடன் உங்களில் ஒருவனான நான் பங்கேற்பேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலமைச்சர் என்ற பொறுப்பினைச் சுமந்து, நாட்டு நடப்பைக் கவனிப்பதுபோலவே திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஜனநாயகப் பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பினையும் சுமந்திருப்பதால், கட்சிப் பணிகளையும் மருத்துவமனையிலிருந்தபடியே கவனித்து வந்தேன்.

திமுக அமைப்புத் தேர்தல்கள் ஒன்றிய அளவில் முடிவுற்று, ஓரிரு இடங்களில் ஏற்பட்ட சின்னச் சின்ன சிக்கல்களும் தீர்க்கப்பட்டு விரைவில் முழுமையான அறிவிப்பு வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, பகுதி கழகச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் நடத்தி முடித்து, நமக்கான இலட்சியப் பாதையில் பயணித்து, மக்களுக்கான பணியினைக் திமுகவினர் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தலைவர் என்ற பொறுப்பில் இருக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய அன்பு வேண்டுகோள்.

உயர்ந்த இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்கான உழைப்பைக் கொடுத்தே ஆக வேண்டும். நம் பாதையில் நாம் உறுதியாகப் பயணிப்போம். சில அரைவேக்காடுகள் குறுக்கும் நெடுக்குமாக விமர்சனச் சேற்றை வீசியபடி ஓடும். நாம் சற்று ஒதுங்கிக் கொண்டு, அவற்றைக் கடந்து செல்ல வேண்டும். நம்மைத் தாக்கி, அதன் மூலம் தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ள நினைக்கும் வீணர்களுக்கு நாம் இடம் தரக்கூடாது. நான் ஏற்கனவே திருவண்ணாமலையில் சொன்னபடி ‘I Don’t care’ என்று அவர்களை அலட்சியப்படுத்துங்கள்.வம்படியாகப் பேசி விளம்பரம் தேடிக்கொள்ள நினைப்போரைத் தவிர்த்து, நம் வழியில் பயணிப்போம். மக்களுடன் நாம் எப்போதும் இருப்போம். மக்கள் நம்முடன் எப்போதும் இருப்பார்கள்.

தாம் எழுதியுள்ள மடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மதுரைவாசிகளின் பாதிபேர் வீட்டு மொய் நோட்டில் இடம்பெற்றிருக்கும் கிரம்மர் சுரேஷ்.!

Halley Karthik

தமிழ்நாட்டின் ஆளுநராக ரவி சங்கர் பிரசாத் நியமிக்கப்படலாம் என தகவல்!

Jeba Arul Robinson

உலகின் மிகப்பெரிய தேனீ; ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

Jayapriya