‘திமுக ஒரு கார்ப்பரேட் கம்பெனி’ – பரப்புரையில் முதல்வர் விமர்சனம்

தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக வெற்றிபெற நினைப்பதாக முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் விமர்சனம் செய்தார். எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின், சேலம் மாவட்டம் பெரிய…

தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக வெற்றிபெற நினைப்பதாக முதல்வர் பழனிசாமி தேர்தல் பரப்புரையில் விமர்சனம் செய்தார்.

எடப்பாடி தொகுதியில் போட்டியிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். அதன்பின், சேலம் மாவட்டம் பெரிய சோரகை சென்றாய பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார். சாமி தரிசனத்துக்கு பிறகு அப்பகுதியில் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம் அவர் வாக்கு சேகரித்தார்.

இதையடுத்து, நங்கவள்ளி பகுதியில் பரப்புரை மேற்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டபேரவையில் அறிவித்து செயல்படுத்திய திட்டங்களை திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்து மக்களை ஸ்டாலின் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டினார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள இலவச வாஷிங்மிஷின், பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, முதியோர் உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.

தொடர்ந்து, ஜலகண்டாபுரத்தில் பரப்புரை மேற்கொண்ட அவர், திமுக ஒரு கார்ப்பரேட் கம்பனி என சாடினார். தேர்தலில் மக்களை ஏமாற்றி திமுக வெற்றிபெற நினைப்பதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆட்சியை பிடித்து விடலாம் என்ற மு.க.ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்றும் விமர்சனம் செய்தார்.

இதையடுத்து, செட்டிமாங்குறிச்சி பகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அவர், அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி, பலம் பொருந்திய வெற்றிக் கூட்டணி என கூறினார். தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக் தொடங்கி இருப்பதாகவும், அரசின் மீது வீண் பழி சுமத்தி ஆட்சியை பிடிக்க ஸ்டாலின் துடிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.