பூங்காவில் சாணி குவியல் – புகார் அளித்த பெண் – வியப்பில் ஆழ்த்திய மத்திய அமைச்சர்!

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பூங்காவில் மாட்டு சாணம் குவிந்திருப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில், களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள்…

உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள பூங்காவில் மாட்டு சாணம் குவிந்திருப்பதாக பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில், களத்தில் இறங்கிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அதை அகற்றும் பணியில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அப்பகுதிவாசிகள் வியப்பில் ஆழ்ந்தனர்.

வாரணாசிக்கு இரண்டு நாள் பயணமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சென்றிருந்தார். அப்போது, பீம் நகர் காலனி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார். அப்போது, அவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த பெண் சிந்தா தேவி என்பவர், பூங்காவில் மாட்டு சாணம் குவிந்திருப்பதாகப் புகார் கூறினார். அந்தப் பூங்காவில் தான் தனது மகளுக்கு திருமணம் நடக்க இருந்ததாகவும் கூறினார்.

இதையடுத்து சற்றும் யோசிக்காமல் அங்கிருந்த மண் வெட்டியை கையில் எடுத்த அமைச்சர் ஸ்மிருதி இரானி, பூங்காவில் குவிந்திருந்த மாட்டு சாணத்தை அப்புறப்படுத்தத் தொடங்கினார். அவர் தூய்மைப் பணியில் ஈடுபடத் தொடங்கியதை அடுத்து, வாரணாசி மாவட்ட பாஜக தலைவர் ஹன்ஸ்ராஜ் விஷ்வகர்மா மற்றும் கட்சியினரும் தூய்மைப் பணிக்காக களத்தில் இறங்கினர். பின்னர், அங்கிருந்த உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ரவீந்திர ஜெய்ஸ்வாலிடமும், அதிகாரிகளிடமும் மக்கள் பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காணுமாறு ஸ்மிருதி இரானி உத்தரவிட்டார். பிறகு, வேறு சில அரசு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

-மணிகண்டன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.