மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகளின் விமானப் பயண உரிமையைப் பறிக்கக் கூடாது என்று டிசம்பர் 3 இயக்கம் பேராசிரியர் தீபக்நாதன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, டிசம்பர் 3 இயக்கம் பேராசிரியர் தீபக்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தில் பயணிக்க மனவளர்ச்சி பாதிப்புடையவர்கள், தகுந்த மருத்துவர் சான்றளித்தால் மட்டுமே பயணிக்க முடியும் என விமானப் போக்குவரத்து விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ள ஒன்றிய அரசிற்கு டிசம்பர் 3 இயக்கம் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. இது இயலாமையை மையப்படுத்தும் பாரபட்சம். ஒன்றிய அரசு உடனடியாக இந்த ஒருதலைபட்சமாக எடுத்துள்ள முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். உச்ச நீதிமன்றம் , ஜீஜா கோஷ் எதிர் ஒன்றிய அரசு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு நேர் எதிராக நடந்து கொள்வது உள்ளபடியே எங்களை ஏமாற்றும் செயல்.
விமாணப் பயண விதிகளில், பயணிக்க இயலாது என்று கருதப்படும் ஒருவருக்கு – ஏன் அவரால் பயணிக்க முடியாது? அதற்கான காரணம் என்ன என்பதையெல்லாம் எழுத்துப்பூர்வமாக விமான நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டுமென்ற விதியை கணக்கிலேயே எடுத்து கொள்ளாமல், மருத்துவச் சான்றை மட்டும் கட்டாயப்படுத்தி, விமான நிறுவனங்களுக்கு ஏதுவாக நடந்து கொண்டுள்ள ஒன்றிய அரசின் நடவடிக்கை, எங்கள் நம்பிக்கையை குலைக்கும் செயலாகும். இப்படி நடந்து கொண்டால் எப்படி மக்களுக்கு அரசின் மீது நம்பிக்கை ஏற்படும்? இந்திய அரசியலமைப்பு சட்டம், நம் அரசுகளை மக்கள் நல அரசாகத்தான் வடிவமைத்துள்ளது, அவ்வாறு இருக்கையில், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய வாழ்கை உரிமைகளைத் தடுப்பது எந்த வகையில் நியாயம்?.
ஒரு பத்திரிகையில் வந்த ஒப்பீடு நியாபகத்திற்கு வருகிறது. வளர்ந்த நாடுகளில், மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான வாழ்க்கை தரம் மற்றும் உரிமைகள் அதிகம் உள்ளதால், இந்தியாவில் கைவிடப்படும் இக்குழந்தைகளை அவர்கள் தத்துதெடுத்து கொள்கிறார்கள் என்றும், அதே நேரம் இந்தியாவில் அவர்களை குழந்தையில்லா பெற்றோர்கள் தத்து எடுத்துக் கொள்வதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இப்படி தடைகளை உருவாக்கினால், வாழ்கையை எப்படி நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்? குழந்தையில்லா பெற்றோர்கள் எவ்வாறு இக்குழந்தைகளை தத்து எடுப்பார்கள். அனைத்து குழந்தைகளையும் ஒரே மாதிரி பார்க வேண்டும் என்று ஒன்றிய அரசு எவ்வளவு வேண்டுகோள் விடுத்தாலும் அவை ஏற்றுக்கொள்ளப்படாது அல்லவா.
இது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கையாக உருவாக்கும் தடைகளை பொது வழிச் சமூகம் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதை டிசம்பர் 3 இயக்கம் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








