காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு முதலமைச்சர் பரிசு

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு 4.31 கோடி ரூபாய் பரிசுத்தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.   தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு…

காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு 4.31 கோடி ரூபாய் பரிசுத்தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

 

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றவர்களுக்கு ரூ 4.31 கோடி பரிசுத்தொகை வழங்கப்பட்டது என்றார்.

 

சரத் கமலுக்கு ரூ.1.8 கோடி, சத்யனுக்கு ரூ.1 கோடி, சவுரவ் கோசலுக்கு ரூ.40 லட்சம், தீபிகா பல்லிகலுக்கு ரூ.20 லட்சம், பயிற்றுனர்களுக்கு ரூ.51 லட்சம், பவானி தேவிக்கு ரூ.35 லட்சம், பிரனவ் வெங்கடேஷ்க்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டத்தில் வீரர்கள் கண்டறியப்பட்டு ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

கடற்கரையோர போட்டிகளுக்கு மத்திய அரடு அனுமதி வழங்கும் என்றும் பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அமைச்சர் மெய்யநாதன் குறிப்பிட்டார். பின்னர் தமிழ்நாடு வீரர் சத்யன் பேசும்போது, ஊக்கப்படுத்துவதனால், சர்வதேச போட்டிகளில் பதக்கம் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

 

பவானி தேவி பேசும்போது, ஒவ்வொரு நிலையிலும் தமிழ்நாடு அரசு மூலம் அதிகமான ஆதரவு கிடைத்து வருகிறது என்றும், விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதற்கு நன்றி என்றும் கூறினார். சரத் கமல் பேசும்போது, பதக்கம் பெற்றதற்காக மட்டும் பரிசு இல்லை, பதக்கம் பெறுவதற்காகவும் பரிசு என்றார். பிரனவ் வெங்கடேஷ் பேசும்போது, பரிசுத்தொகை அடுத்த நிலைக்கு செல்வதற்கு உதவியாக இருக்கும் என நன்றி தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.